பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மொஹெஞ்சொ - தரோ


அவை அவர்கட்கு மறு குரல் கொடுப்பதும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்த பழைய கவுதாரி வளர்ப்பை நினைப் பூட்டுகின்றன.[1]

கொத்துவேலை

சிந்து வெளியில் வாழ்ந்த கொத்தர்கள் தம் தொழிலிற் பண்பட்ட புலமை உடையவர் ஆவர். அவர்கள் உலர்ந்த செங்கற்களையும் சுட்ட செங்கற்களையும் அடுக்கி, ஒழுங்கான சுவர்களையும் வீடுகளையும் மாளிகைகளையும் பொது இடங்களையும் கோட்டைகளையும் அப்பண்டைக் காலத்திலேயே பண்பட அமைக்கக் கற்றிருந்தனர் என்பது வியப்பூட்டுஞ் செய்தியே ஆகும். அவர்கள் ஒரு மாளிகையில் 2700 செ.மீ. கூடம் அமைத்து, அதன் மேல் அடுக்கைத் தாங்க 20 துண்களை நன் முறையில் நிறுத்தியுள்ளனர்; வீட்டுத் தரையை வழவழப்பாக்கி, அதில் வட்டக் கோடுகளும் சதுரக் கோடுகளும் வகையுற இழுத்துள்ளனர்; மழையில் நனையத்தக்க வீட்டுப்புறச் சுவர்களைச் சுட்ட செங்கற்களாலும் உட்புறச்சுவர்களை உலர்ந்த செங்கற்களாலும் கட்டியுள்ளனர். இஃதொன்றே அவர்கள் அறிவையும் அனுபவத்தையும் நன்கு விளக்க வல்லது; கிணற்றின் உட்புறத்திற்கென்றே தனிப்பட்ட கற்கள் செய்துள்ளமை வியத்தற்கு உரியது. சுவர்களுக்குள்ளும் கழிநீர்க் குழிகளை அமைத்து வீடு கட்டும் ஆற்றல் பெற்ற அப்பெருமக்களை எவ்வாறு புகழ வல்லேம்! வீடு - கிணறு - குளம் பற்றிய பகுதியில் பல வியத்தகு உண்மைகள் கூறப்பட்டமையால், இங்கு, அவற்றை மீட்டும் கூறல் கூறியது கூறலா’கும். சுருங்கக் கூறின், 5000 ஆண்டு கட்கு முன் இருந்த சிந்து வெளிக் கொத்தர்கள், தம் தொழில் முறையை அறிவு கொண்டு செய்து வந்தனர்: தொழிலை வயிற்றுக்காகச்செய்யவில்லை; கலைக்காகச் செய்து வந்தனர் என்னலாம். இவ்வுண்மையை அவர்கள் கட்டியுள்ள நீராடும் குளத்தின் நல்லமைப்பைக் கொண்டும் ஹரப்பாவில் கட்டியுள்ள மிகப்பெரிய


  1. Mackay’s ‘The Indus Civilization’ pp.187, 188.