பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

169


களஞ்சிய வேலைப்பாட்டைக் கொண்டும் நன்கறியலாம். இதனை மேலும் விரித்தல் வேண்டா.

மட்பாண்டத் தொழில்

சிந்துவெளி நாகரிகத்தில் சிறப்பிடம் பெறத்தக்கவை மட்பாண்டங்களே ஆகும். ஆகவே, அவற்றைச் செய்த வேட்கோவர் திறமையே திறமை! அவர்தம் பெருமையே பெருமை! அவர்களே அவ்வெளியில் முதல் இடம்பெற்றிருந்தனர் என்னல் மிகையாகாது. வியப்பூட்டும் விதவிதவிதமான விளையாட்டுப் பொருள்கள், நுண்ணிய வேலைப்பாடு கொண்ட மிகச் சிறிய பொருள்கள், எலும்புகளையும் சாம்பலையும் பிறவற்றையும் புதைத்து அடக்கம் செய்வதற்கு அமைந்த தாழிகள்,[1] பலவகை ஒவியங்கள் தீட்டப்பெற்ற பாண்டங்கள், கழிநீர்க் குழைகள், ஒலி பெருக்கிக் குழைகள், பொருத்தமான அளவுகள் அமைந்த பலவகைச் செங்கற்கள், வீட்டு வேலைகட்கு உரிய பல்வகைப் பொருள்கள் இன்ன பிறவும் வேண்டியோர் வேண்டியவாறு செய்து தந்த வேட்கோவர் பேராற்றலை என்னென்பது!

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த வேட்கோவரை விட ஹரப்பா வேட்கோவர் பின்னும் உயர்ந்தவராக இருத்தல் கூடுமோ என்று அறிஞர் ஐயுறுகின்றனர். அங்கு ஒர் இடத்தில் 16 காளவாய்கள் கண்டறியப்பட்டன. அவை அளவிற் சிறியவை: ஆனால், விரைவில் சூடேறத்தக்க முறையில் அமைக்கப்பட்டவை: களிமண் செப்புகள், பதுமைகள், மணிகள் நகைகள் ஆகிய வற்றைச் சூளையிடவும், கல் வளையல்கள், பட்டுக்கல்களிமண் முத்திரைகள் ஆகியவற்றைச் சுட்டு மெருகிட்வும், சிவப்பு மணிகளைச் செய்யவும் பயன்பட்டவை. வேண்டிய அளவு வெப்பத்தையும் குளிர்ச்சியையும் ஊட்டி, விதவிதமான நிறங்களை ஏற்றுதற்கு வசதியாக இருந்தவை.


  1. 1. தமிழ் அகத்து வேட்கோவா பெருமையைப் புறநானூற்று 32,828. 256 முதலிய பாடல்களால் அறிக. எகிப்திய மொழியில் ‘வேள்’ என்பதுமட்பாண்டத்தைக் குறிக்கும் சொல்லாதல் அறிக.