பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மொஹெஞ்சொ - தரோ


மொஹெஞ்சொ-தரோவில் ஒவியங்கள் தீட்டப் பெறாத மட்பாண்டங்களின் வேலைப்பாடு கண்கவர் வனப்புடையது. 1 செ. மீ. உயரத்தில் அழகிய பதுமைகள் செய்யக் கற்றிருந்த அவ்வேட்கோவர் திறமையை பண்பட்ட கலையறிவை இன்று எண்ணி எண்ணி வியவாத அறிஞர் இல்லை!

கல்தச்சர் தொழில்

சிந்து வெளியிற் கற் சட்டிகள், நீர் பருகும் பச்சைக் கல் ஏனங்கள், அம்மிகள், குழவிகள், உரல்கள், எந்திரங்கள், ஆட்டுக்கற்கள், தூண்களைத் தாங்கும் குழியமைந்த கற்கள், சிற்றுருக்கள், லிங்கங்கள், யோனிகள், முத்திரைகள் இன்ன பிறவும் செய்யப்பட் டுள்ளன. இவற்றைக் கொண்டு, சிந்து வெளியில் கல் தச்சர்கள் இருந்தனர் என்பதும் கல் வேலை நடைபெற்றது என்பதும் நன்கறியலாம். ஹரப்பாவில் அளவற்ற லிங்கங்கள் பல வடிவினவாகக் கிடைத்துள்ளன. மனித உருக்கள் (சிலைகள்) செய்யப்பட்டடுள்ளன. அவ்வேலைப்பாடு வியக்கத் தக்கதாக உள்ளதென்று அறிஞர்கள் கூறி வியந்துள்ளனர்.

மரத்தச்சர் தொழில்

மரப்பொருள்கள் விரைவில் அழியும் இயல்பின. ஆதலின், சிந்து வெளியில் இன்று கிடைத்தில எனினும், அங்கு மரத்தால் இயன்ற கட்டில்கள், நாற்காலிகள், மேசைகள், முக்காலிகள், பீடங்கள், மனைகள், கதவுகள், பெட்டிகள், தூண்கள், பலவகைக் கருவிகளின் கைப்பிடிகள், விளையாட்டுக் கருவிகள் முதலியன இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய சான்றுகள் இருக்கின்றன. எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்ட கால்களைக் கொண்டமரத்தால் ஆன முக்காலிப்பீடங்களும் எருமைக் கால்கள் வைத்த சாய் மனைகளும் இருந்தன என்பதை முத்திரைகளைக் கொண்டு அறியலாம். அம்மரத்தச்சர்கள் காட்டிய பழக்கத்திலிருந்தே, சிங்கக் காலிகளைக் கொண்ட பீடங்கள் பிற்காலத்தில் தோற்றமெடுத்தன போலும்!