பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள்-தொழில்கள்-கலைகள்

185

எடையில் சரியானவையாகவும் அளவில் ஒழுங்கானவையாகவும் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் அறைந்து வியக்கின்றனர்.

மருத்துவக் கலை

இன்று இந்தியா முழுதிலும் ஆயுர்வேத யூனானி மருத்துவப் புலவர் பயன்படுத்துகின்ற ‘சிலா சித்து’ என்னும் மருந்து மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. சிந்து வெளியினர், சம்பர் (Sambur) மான் கொம்புகளைப் பொடியாக்கி மருந்தாகப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. மான் கொம்புகளும், மாட்டுக் கொம்புகளும் பல கிடைத்துள்ளன. மாட்டுக்கொம்புகள் சில கிண்ணம் போலக் குடையப்பட்டுள்ளன. அவை மருந்து வைத்துக் கொள்ளப் பயன்பட்டன ஆகும். நாட்டு மருத்துவத்தில் ‘சிலா சித்து’ உயர்தர மருந்தாகும். அது வயிற்றில் உண்டாகும் குடல், நுரையீரல் முதலியன பற்றிய நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அது, இமயமலைப் பாறைகளிலிருந்து கசிந்து வருவது. அதனை மலை வாழ்நர் கொண்டுவந்து இன்றும் உள் நாடுகளில் கொடுக்கின்றனர். சிந்து வெளியிலேயே மொஹெஞ்சொ-தரோவை ஒத்த நாகரிகநகரமாக இருந்த ‘ஒத்மஞ்சொ-புதி’ என்னும் இடத்தில் மருந்துக்குரிய ஒருவகை எலும்புகள் சில கிடைத்துள்ளன. அவை காது, கண், தொண்டை தோல் பற்றிய நோய்களைக் குணப்படுத்தும் வன்மையுடையன. ‘மொஹெஞ்சொ-தரோ மக்கள் விருந்தில் விருப்புடையர் என்பது நன்கு புலனாகின்றது. ஆதலால், அவர்கள் அசீரணத்தால் துன்புற்றனராதல் இயல்பே. அவர்களைக் குணப்படுத்த மகளிர் சில மருத்துவ முறைகளை அறிந்திருந்தனர் என்று கூறல் தவறாகாது’.[1] ‘...இன்ன பிறவற்றால், இன்றுள்ள ஆயுர்வேத மருத்துவக் கலை பற்றிய மூல உணர்ச்சிகள் சிந்துவெளி மருத்துவர்களிடமிருந்தே தோற்றமாயின என்னல் நன்கு வெளியாம்’.[2]


  1. Mackay’s ‘The Indus Civilization pp. 189, 190.
  2. K.N. Dikshit’s ‘Pre-historic Civilization of the I.V.P. 31.