பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மொஹெஞ்சொ - தரோ


வான நூற் புலமை

சிந்து வெளி மக்கள் வீடுகள் கட்டியுள்ள முறையிலிருந்து இராசி கணங்களின் இயக்கங்களைக் கவனித்து வந்தனர் என்பது தெளிவாகிறது, முத்திரைகளிற் குறிப்பிடப்பட்டுள்ள சில குறியீடுகள் இராசிகளைத் தாம் குறிக்கின்றனர்; அம்மக்களது ஆண்டுத் தொடர்ச்சி ஏறக்குறையத் தை மாதத்திலிருந்தே தொடக்கமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர்.[1] ஆனால், அவற்றைத் திட்டமாகக் கூறக்கூடவில்லை என்று இராவ் பகதூர் தீக்ஷித் போன்றோர் கூறுகின்றனர்.[2] ஹிராஸ் பாதிரியார், ‘சிந்து வெளி மக்கள் இராசி மண்டலத்தை நன்கு அறிந்தவர்கள், அவர்கள் காலத்தில் எட்டு இராசிகளே இருந்தன, சுமேரியர் காலத்திற் பத்து இராசிகள் கணக்கிடப்பட்டன. சிந்து மக்களின் இராசி மண்டலக் குறிப்பைக் கணித்துப் பார்க்கையில், அக்காலம், ஏறக்குறைய கி.மு. 5610 எனக் கூறலாம். இது, சுமேரியர் நாகரிகமே தோன்றாத காலம் ஆகும் என்று பேசியுள்ளார்.[3]

உடற் பயிற்சி

ஹரப்பாவிற் கிடைத்த முத்திரை ஒன்றில் ஒர் ஆடவன் உடற் பயிற்சி செய்வதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், சிந்துவெளி மக்கள் ஓரளவு உடற்பயிற்சி முறைகளை அறிந்திருந்தனர் என்று கூறுதல் தவறாகாது.[4]

நகர மக்கள்

தொழில்களையும் கலைகளையும் நோக்க, சிந்து வெளி நகரங்களில் மொழிப் புலவர், நிமித்தங் கூறுவோர், காலக்கணிதர், மருத்துவர், இசைவாணர், கூத்தப் புலவர், கூத்த மகளிர், அரசியற்


  1. பண்டைத் தமிழமக்களின் ஆண்டும் தை மாதத்திலிருந்தே கணிக்கப்பட்டதென்று தமிழறிஞர் சிலர் கூறுகின்றனர்.
  2. Vide his book, p.31.
  3. Vide his Lecture, ‘Madras Mail’ (21-10-37).
  4. M.S.Vats’s ‘Excavations at Harappa’. Vol. I. p. 295.