பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

187


மகளிர், அரசியற் பணியாளர், நகரக்காவலர், சமயக் குருமார் (புரோகித்ர்), வேளாளர், உணவுப் பொருள் விற்போர், கூல வாணிகர், பொற்கொல்லர், கன்னார், தச்சர், மீன்வாணிகர், அப்ப வாணிகர், உப்புவாணிகர், மரக்கலம் ஒட்டுவோர், வண்டி ஒட்டுவோர், மரக்கலம் கட்டுவோர், வேட்கோவர், இரத்தினப் பணியாளர், செதுக்கு வேலையாளர், ஒவியந் தீட்டுவோர், சிற்பிகள், கால் நடை வளர்ப்போர், சங்கு அறுப்போர், சிற்ப வேலை செய்பவர், வெண்கல்-மாக்கல் முதலிய பலவகைக் கல்வேலை செய்வோர், தந்தவேலை செய்பவர், விளையாட்டுப் பொருள்கள் செய்வோர், நீர்கொண்டு வருபவர், கொத்தர்கள், முத்திரை செய்பவர், நாவிதர், தோட்டிகள் முதலிய பல தொழில் புரியும் மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதைத் தெளிவுற அறியலாம். இவர்கள் அல்லாமல் எகிப்து, அஸிரியா, பாபிலோனியா, ஏலம், சுமேரியா, பாரசீகம் நடு ஆசியா, பர்மா, தென் இந்தியா முதலிய இடங்களிலிருந்து வாணிபத்தின் பொருட்டுக் குடியேறியிருந்த மக்கள் சிலராவர். ஆதலின், மொஹெஞ்சொ-தரோ இக்காலத்துக் கராச்சி நகரைப்போலப் பல நாட்டவரைக் கொண்டிருந்த வாணிகப் பெருநகர் ஆகும்: பண்டைப் பூம்புகார் , கொற்கை, முசிறி, தொண்டி போன்ற வாணிப நகரம் ஆகும் என்பது அறியத்தக்கது. இதனாற்றான் அங்குக் கிடைத்த எலும்புக் கூடுகளும் மண்டை ஒடுகளும் மங்கோலியர், அல்பைனர், மத்யதரைக் கடலினர், ஆஸ்ட்ரேலியா இனத்தவர் ஆகிய பல் நாட்டு மக்களுடையனவாகக் காணப்பட்டன.