பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

201


கூறுவனவாகலாம். அணில், செம்மறியாடு, முயல், மான், நாய் ஆகிய விலங்குகளின் உருவங்கள் - கல், பீங்கான், வெண்கலம், சுட்ட களிமண் ஆகியவற்றின் வில்லைகளில் பொறிக்கப்பட்டு மேலே துளையிடப்பட்டுள்ளன. அவை கயிறு கொண்டு கட்டிக் கொள்ளப் பயன்பட்டன. புறாவடிவிலான தாயித்துக்களும் அணியப்பட்டன. தலைப்பில் முடியிடப்பெற்ற சிப்பியாலான தாயித்து ஒன்று மந்திர சக்தி உடையதாகக் கருதப்படுகிறது. இங்ஙனம் முடியிடுதல் மந்திர வன்மை உடையதென்று மேற்குப் புற நாடுகளிலும் அப்பழங்காலத்தில் கருதப்பட்டதாம். அத்தாயித்தின் நடுவில் இரண்டு சிறிய துளைகள் இருக்கின்றன. எனவே, அது பொத்தானாகவோ தாயித்தாகவோ பயன்பட்டிருக்கலாம். சில தாயித்துக்களில் அடி-முடி அற்ற வரிவடிவங்கள் சுமேரியர் முத்திரைகளை ஒத்துக் காணப்படுகின்றன. மணிகளைத் தாயித்துக் களாகப் பயன்படுத்தும் வழக்கமும் சிந்து வெளி மக்களிடை இருந்தது. இப்பழக்கம் மேற்குப் புற நாடுகளிலும் இருந்ததாகும்.

சில தாயித்துக்களில் ஸ்வஸ்திகா கிரேக்கச் சிலுவை போன்ற குறிகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஏலம், சுமேரியா முதலிய நாடுகளில் இருந்த பண்டைக் குறியீடுகளே ஆகும். ஸ்வஸ்திகா’ குறி யோகக் குறியாக இந்நாட்டில் இன்றளவும் கருதப்படுகிறது. இக்குறிகள் சிந்து வெளி இல்லச் சுவர்கள் மீதும் இருந்தன.

சமயப் பதக்கம்

சமய சம்பந்தமான பதக்கங்களும் பண்டைக்காலச் சிந்துவெளி மக்களால் அணியப்பட்டு வந்தன. வட்டப்பிளவு போன்ற ஒரு பதக்கத்தில், ஒற்றைக் கொம்புடைய. விலங்கொன்று நிற்கிறது. அதன் எதிரில் பலிபீடம் ஒன்று இருக்கிறது. பிறையின் முனைகள் முடியும் இடத்தில் நீள் சதுரவடிவம் ஒன்று காணப்படுகிறது. இதுவும் விலங்கு வடிவமும் நடுவில் குடையப்பட்டுள்ளன. அவற்றின் துளைகளில் சிவப்புச் சாந்து பூசப்பட்டிருத்தல் வேண்டும். அப்