பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

203


குறிக்கப்பட்ட நடனமும் சமயத் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும் என்பது பொருத்தமே அன்றோ? ஹரப்பாவில் கிடைத்த தாயித்து ஒன்றில், புலி முன் ஒருவன் மத்தளம் அடிப்பது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. வேறொரு முத்திரையில் எருதின் முன்பு மங்கை ஒருத்தி கூத்தாடுதல் குறிக்கப்பட்டுள்ளது. நாட்டிய மகளைக் குறிக்கும் வெண்கலப் படிவம் ஒன்று ஹரப்பாவில் கிடைத்தது. அதன் வேலைப் பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை. அச்சிலை கோயில் நடனமாதின் சிலையாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.[1]

படைத்தல் பழக்கம்

கடவுளர் உருவங்களின் முன் உணவுப்பொருள்களையும் பிறவற்றையும் படைத்தல் அக்கால மக்களின் பழக்கமாக இருந்தது என்பது சில தாயித்துக்கள் கொண்டும் முத்திரைகள் கொண்டும் கூறலாம்; தண்டின்மீது பொருத்தப்பெற்ற தட்டுகள் (Offering Stands) பல கிடைத்தமை கொண்டும் கூறலாம்; ஒரு முத்திரையில் பெண்கள் பலர் படைக்குத் தட்டுகளை ஏந்தி நிற்பதாகச் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது.[2] ‘ஹரப்பாவில் கோவில் அணிகள் சில கிடைத்தன; அவை சங்கு, களிமண், கல், உயர்தரக் கல் முதலியவற்றால் செய்யப்பெற்றவை. அவை கோவில்களுக்கு உரியனவாகலாம் என்று எம்.எஸ்.வாட்ஸ் என்னும் அறிஞர் அறைகின்றார்.[3]

  1. தமிழகத்தில் கோவில் நடனமாதர் இருந்தனர். இருக்கின்றனர்: அவர்கட்கு ‘மானியம்’ உண்டு. விழாக் காலங்களில் கோவில் நிகழ்ச்சிகளிற் கலந்துகொண்டு இசை பாடலும் நடித்தலும் அவர்தம் தொழில். அவர்கள் கூத்தாடியா எனப்படுவர். அவர் பரம்பரையினர் இன்றும் கபிஸ்தலம் முதலிய இடங்களில் இருக்கின்றனர்.
  2. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. I, p.299
  3. Ibid p.443.