பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. இடுதலும் சுடுதலும்

சுடுதல்

சிந்துவெளி மக்கள் இறந்தாரை என் செய்தனர் என்பது மொஹெஞ்சொ-தரோ ஆராய்ச்சியை மட்டுங் கொண்டு திட்டமாகக் கூறுதற்கில்லை. ஹரப்பா ஆராய்ச்சியையும் உளங் கொண்டு நோக்கின், சில விவரங்களை அறியலாம். எனினும், இத் துறைக்குரிய ஆராய்ச்சிப் பொருள்கள் எகிப்திலும் சுமேரியாவிலும் கிடைத்தன போலப் பேரளவு சிந்துவெளியிற் கிடைத்தில. மொஹெஞ்சொ-தரோவில் சமாதியோ, இடுகாடோ கிடைத்தில, ஆயின், சந்துகளில், வீடுகட்கு அடியில் நீர் அருந்தும் குவளைகட்குள் இருந்த எரித்த சாம்பலும் எலும்புத் துண்டுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றை நோக்க, சிந்து வெளி மக்கள் இறந்தார் உடலை எரித்துச் சாம்பலையும் எலும்புகளையும் சேமித்துப் புதைத்து வந்தனர் என்பது தெளிவாகிறது. இப்பழக்கம் இன்றும் ஹிந்துக்களிடை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இடுதல்

ஹரப்பாவில் கிடைத்த சவக் குழிகளில் இரண்டு மூன்று அடுக்குகள் உண்டு. மிகவும் அடியில் இருந்த சவக்குழிகளில் பிணங்களை நேராகப் படுக்கவைத்துக் கைகளை மார்பின் மீது மடக்கிவைத்துப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட உடல்கள் மூன்று வகையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன; (1) சில உடல்கள் தனித்தனியே இடம் விட்டுப் புதைக்கப்பட்டுள்ளன; (2) சில நெருக்கமாகப் புதைக்கப்பட்டுள்ளன; (3) சில ஒன்றின்கீழ் ஒன்றாகப் புதைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு பிணங்களைப் புதைக்கும் பழக்கம் பலுசிஸ்தானத்திலும் பெருவழக்குடையதாக இருந்தது. அவ்வுடல்களின் அருகில் நீருடைய மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகள், இறந்தார் பயன்படுத்திய பிற பொருள்கள் முதலியன