பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மொஹெஞ்சொ - தரோ

போட்டு மீன் பிடிப்பது போலவும், மீன் ஆமை பறவைகள். இலைகள் முதலிய பல பொருள்களைப் போலவும் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மயில்கள் தெய்விகத்தன்மை பெற்றவையா?

அக்கால மக்கள் மயில்களைத் தெய்விகச் சிறப்புடைய பறவைகளாக மதித்தனர் என்பது தெரிகிறது. இம்மயில்களின் துணையைக் கொண்டு மனிதர் ஆவிகள் மேல் உலகம் போவன என்பதை அக்காலத்தவர் எண்ணி வந்தனர் போலும்! அன்றிச் சூக்கும் உடலே மயிலாக உருவகப்படுத்தப்பட்டதோ அறியோம். ஒரு தாழி மீதுள்ள சித்திரங்களில் மூன்று மயில்கள் பறப்பது போலத் திட்டப்பட்டுள்ளன. அம்மயில்கட்கு இடையிடையே விண்மீன்கள் வரையப்பட்டுள்ளன. ஆதலின், ‘மயில்கள் சூக்கும உடல்களைக் குறிப்பன: அவை மேல் உலகத்தை அடைவதாகப் பண்டையோர் எண்ணினர்’ என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.[1] சில தாழிகள் மீது சிறிய மயில்கள் அணியணியாக இருப்பனபோல ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வேறு சிலவற்றின் மீது ஐந்து மயில்கள் பறப்பன போலக் காணப் படுகின்றன. சில தாழிகள் மீது காணப்படும் மயில்களின் தோகை திரிசூலம் போலக் காணப்படுகிறது. சில மயில்களின் தலைமீது இரண்டு கொம்புகளும் அவற்றுக்கு இடையில் நிமிர்ந்த மலர்க்கொத்தும் காணப்படுகின்றன.

பறவை முக மனித உருவங்கள்

சில தாழிகள் மீது பறவை முக்குப் போன்ற நீண்ட மூக்குகளையுடைய மனித உருவங்கள் காணப்படுகின்றன.


  1. மயிலேறி விளையாடு குகனே என வரும் அடியும், மயில் முருகனைத் தாங்க முடியாத பறவையாக இருந்தும், கருடனைப் போல ஊர்தியாகக் கூறப்பட்டதன் உட்கருத்துப் பண்டையோர் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே போலும்! நடுவீட்டில் ஆண்மயிலைப்போல ஒவியம் எழுதி அதனை மட்டும் வழி படும் வழக்கம் இன்றுந் தமிழ்நாட்டில் உண்டு. அதனை மயிலேறு விழா என்பர்.