பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

257


தானம் ஒன்றிலேதான் திராவிடம் ப்ராஹுயி மக்களால் பேசப்படுகிறது.இது வியப்புக்குரிய தன்றோ? அறிஞர் சி.ஆர்.ராய் என்பார் நூறு ப்ராஹுயி மக்களை அளந்து சோதித்துளர். பண்டைக் கால ப்ராஹுயி மக்கள் மத்தியதரைக் கடலினர் என்பதில் ஐயமே இல்லை. இம்முடிவையே அவர்தம் பழக்க வழக்கங்களும் ஆதரிக்கின்றன. ஆடவர் தம் குடும்பத்தைச் சேர்ந்த மிக நெருங்கிய பெண்ணையே (திராவிடரைப் போல மாமன் மகளையோ, அக்காள் மகளையோ) மணந்து கொள்கின்றனர். அவர்கள் தம்மைத் தூய சமூகத்தினர் என்று கூறுகின்றனர். ஆனால், சிறிது கலப்பு ஏற்பட்டுவிட்டதை நன்கறியலாம். எனினும், அவருள் உயர்ந்தவர் தூயவர் எனக் கூறலாம். அவர்களிடம் மொழித் தூய்மையும் பேரளவு காணப்படுகிறது. அத்தூய்மையாற்றான் அவர்கள் மத்தியதரைக் கடலினர் என்பதை நாம் அறிதல் முடிகிறது. இவற்றால், மத்தியதரைக் கடலினரும் பண்டை ப்ராஹுயி மக்களும் திராவிடரும் ஒரே இனத்தவர் என்னும் தடுக்க முடியாத முடிவுக்கு நாம் வர வேண்டுபவராக இருக்கின்றோம்.

“மத்தியதரைக் கடலினர்க்கும் திராவிடர்க்கும் தொடர்பை உண்டாக்கும் நிலையில் உள்ளவர் ப்ராஹுயி மக்களே ஆவர். மிகப் பழைய காலத்தில் மத்திய தரைக்கடலினர் வடமேற்குக் கணவாய்களின் வழியாக வந்த பொழுது ஒரு சாரார் பலுசிஸ்தானத்தில் தங்கிவிட்டனராதல் வேண்டும். அவர்கள், இன்று ஒரளவு மாறுதல் அடைந்திருப்பினும், தென் இந்தியா சென்ற தூய மத்தியதரைக் கடலினரைப் பல ஆம்சங்களில் இன்றும் ஒத்துள்ளனர். கூடை முடைதல் என்பது ப்ராஹுயி மக்களிடமும் திராவிடரிடமும் ஒரேவகைப் பயிற்சியில் இன்றும் இருந்து வருதல் அவ்வகைப் பயிற்சி பிற இந்தியப் பகுதிகளில் இல்லாதிருத்தல் - நன்கு கவனித்தற்கு உரியது. இருதிறத்தாரும் பயன்படுத்தும் கூடைகள் ஒரே மாதிரியாக இருத்தல் வியக்கத் தக்கது.