பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மொஹெஞ்சொ - தரோ


எனப்படும்.அக்குழுவில் சிறப்புற்ற ஆராய்ச்சியாளராக இருந்தவர் ஸர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் ஆவர். அவர் வடஇந்தயாவில் பல இடங்களில் ஆராய்ச்சி நிகழ்த்தினார். அவரது உழைப்பின் பயனாய் நாலந்தா, தக்ஷசீலம், பாடலிபுரம், கோசாம்பி முதலிய பண்டை நகரங்களைப் பற்றிய விவரங்கள் சிலவும், தென் இந்தியாவில் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க பொருள்களும் கல்வெட்டுகளும் கிடைத்தன. மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்த அரசியலாரிடம், பணம் இல்லை. ஆதலின் - இந்திய ஆராய்ச்சி வேலை மந்தமாகவே நடைபெற்று வந்தது.

சிந்துவெளி நாகரிகம்

இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோடு போர் செய்ய வேண்டியவர் ஆயினர். ‘அப்பகைவர் நல்ல நகரங்களை அமைத்துக்கொண்டு மாட மாளிகைகளில் சிறந்த செல்வப்பெருக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; உருவவழிபாடு கொண்டவர்; தட்டை முக்குடையவர்; குள்ளர்கள்; மாயா ஜாலங்களில் வல்லவர்கள்; வாணிபத் திறமை உடையவர்கள்’ என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகின்றது. இக்குறிப்புகளால் ஆரியர்க்கு முற்பட்ட இந்திய மக்கள் சிந்து வெளியில் சிறந்த பட்டணங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தி புலனாகின்றது. இஃது உண்மையே என்பதை உணர்த்தவே போலும், சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவும் மொஹெஞ்சொ-தரோவும் அறிஞர் கண்கட்குக் காட்சி அளித்தன.[1]

1920 ஆம் ஆண்டில் பஞ்சாப் மண்டிலத்தில், மான்ட் கோமரிக் கோட்டத்தில், ராவி - சட்லெஜ் யாறுகளுக்கு இடையில், லாஹூர் - முல்ட்டான் புகை வண்டிப்பாதையில்


  1. Partick Carleton’s ‘Buried Empires’ pp. 162, 163.