பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

சிந்து யாறு

இப் பேரியாறு திபேத் பீடபூமியில் உள்ள கைலாச மலைகளில், கடல்மட்டத்திற்கு மேல் ஆறு இலட்சம் செ. மீ. உயரத்தில் உற்பத்தியாகின்றது. இதன் அருகில் சட்லெஜ் என்னும் இதன் கிளையாறும் பிரமபுத்திரா என்னும்பேரியாறும் உற்பத்தி ஆகின்றன. இதினின்றும் 104 கி. மீ. தொலைவிற்றான் கங்கைப் பேரியாறு உற்பத்தி ஆகின்றது. ‘சிந்து’யாறு திபேத், காஷ்மீர் நாடுகளில் வடமேற்காக 1280 கி.மீ. சென்று, கில்ஜிட் ஹன்ஸா என்னும் இரண்டு இடங்கட்கு இடையில் தெற்கு நோக்கித் திரும்பிப் பஞ்சாப் மண்டிலத்தை அடைகின்றது. 80 கி.மீ. தெற்கே ஒடிய பின்னர், ஆப்கானிஸ்தானத்து யாறாகிய ‘காபூல்’ யாறு இதனுடன் அட்டாக் என்னும் இடத்திற்கு அருகில் கலக்கின்றது. அட்டாக்குக்கு 752 கி. மீ. தெற்கே, பஞ்சாப் மண்டிலத்தை மருத நிலமாகத் திகழச் செய்து வருகின்ற ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்னும் ஐயாறுகளும் சிந்துவில் கலக்கின்றன. சிந்து ஆறு கடலிற் கலக்கும் இடத்தில் உள்ள புகார் நிலம் (Delta) 3000 சதுரக் கல் பரப்புடையது. சிந்து யாறு அடித்துக்கொண்டு வரும் ஏராளமான மணலும் மண்ணும் வந்து சேர்வதாலும், சிந்துயாறு அடிக்கடி தன் போக்கை மாற்றிக்கொள்வதாலும் ஆற்று முகத்தில் உள்ள கிளை யாறுகள் அடிக்கடி தம் போக்கை மாற்றிக் கொள்கின்றன. சிந்து யாற்றின் நீளம் ஏறக்குறைய 3200 கி. மீ. ஆகும்.இதன் பாய்ச்சல் பெற்றுள்ள நிலம் 960,000 ச.கிமீ ஆகும். ஆண்டில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை இமய மலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால், சிந்து யாறு அளவு கடந்த வெள்ளப் பெருக்கெடுத்து மிக்க வேகமாக ஓடி வரும். இவ்வெள்ளத்தால் உண்டான அழிவுகள் பல; அழிந்த நகரங்கள் பல; இந்த யாற்றில் மீன்கள் மிக்குள்ளன. நீண்ட முக்குடைய் முதலைகள் மிகுதியாக இருக்கின்றன. இந்த வற்றாத வளமுடைய