பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

37


மேட்டுப் பகுதி கிழக்கு நோக்கியும் தென்கிழக்கு நோக்கியும் சரிந்துள்ளது. அதனால் மகா நரி, கோதாவரி, கிருஷ்ணை, காவிரி என்னும் பெரிய யாறுகள் கிழக்கு நோக்கி ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன. இந்த யாறுகள் பாயும் நிலப்பகுதிகள் வளமுடையனவாகும் மக்கள் தொகுதி மிக்குடையனவாகும். இந்த யாறுகள் மேற்கு மலைத் தொடர்ச்சியில் உற்பத்தியாவன.

கோதாவரி

இந்தப் பெரியாறு 1440 செ மீ நீளமுடையது. இதன் சமவெளியில் அரிசி, புகையிலை, எண்ணெய் விதைகள், கரும்பு முதலியன பெருவாரியாக விளைகின்றன. இதனை அடுத்துள்ள காடுகளில் தேக்க மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்த யாற்றின் நெடுந்துரம் ஹைதராபாத் நாட்டில் அடங்கி இருத்தலால், இந்த யாற்றால் உண்டாகும் பெரும்பயனை அந்நாடே பெற்றுவருகின்றது.

கிருஷ்ணை

இது 1280 செ மீ நீள முடையது. 180 செ. மீ. தொலைவு பம்பாய் மண்டிலத்தில் ஒடிப்பின்பு ஹைதராபாத்திற்குட் புகுந்து, பின்னர்ச் சென்னை மண்டிலத்தை அடைகின்றது. இதன் பாய்ச்சலைப் பெற்ற மருத நிலங்களில் நெல் முதலிய பலவகைப் பொருள்கள் வளமுறப் பயிராகின்றன்.

காவிரி

இந்த யாறே தமிழ் நூல்களிற் சிறப்புப் பெற்றதாகும். இது மேற்கு மலைத் தொடரில் தோற்றமாகி, மைசூர்நாட்டின் வழியே தமிழ் நாட்டை அடைந்து வங்கக் கடலில் கலக்கின்றது. இதன் நீளம் 760 செ. மீட்டராகும். இதன் பயனை அடைந்துவரும் நிலம் 76,800 ச. கி. மீ பரப்புடையது. இது தஞ்சாவூர்க் கோட்டத்தில் கடலோடு கலக்கின்றது. இது பொன்னைக் கொழிக்கும் பெருமை யுடையதாதலின், ‘பொன்னி எனப் பெயர் பெற்றது.