பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

39


ஜெனரல் கன்னிங்காம் என்பாரும் பிறரும் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்குகளாகிய காஜிப்பூர், காசி ஆகிய கோட்டங்களில் உள்ள பல இடங்களில் நிகழ்த்திய ஆராய்ச்சி மூலம், செம்பினாற் செய்யப்பட்ட கருவிகள் மட்டும் இன்றிப் பல ஒவியங்களும் சிவப்புக் கற்களாலாய மணிகளும், சிந்து ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் கிடைத்தவற்றை ஒத்த பல பொருள்களும் வெளிப்பட்டிருக்கின்றன. வாரணாசி காசிக் கோட்டத்தில் சில செம்புக் கருவிகளும் சக்கிமுக்கிக் கற்களும் கிடைத்தன. இவைபோலவே, கங்கை ஆற்றின் எதிர் கரையிலுள்ள காஜிப்பூர்க் கோட்டத்திலும் பல பொருள்கள் கிடைத்திருக்கின்றன.

கெளசாம்பி தோன்றிய காலம்

ஐக்கிய மண்டிலத்தின் பல இடங்களில் பண்டைக்காலப் பொருள்கள் பல கிடைத்துள்ளன. ஓரிடத்தில் ஒன்பது வாய்ச்சிகள் உட்படப் பதினாறு செப்புக் கருவிகள் கிடைத்தன; இருபுறமும் அவ்வாறு கணைகளுடன் கூடிய செம்பாலாய அம்பு முனைகள் அகப்பட்டன.வடமதுரையில் ஒரிடத்தில் இருந்த மண்மேட்டைத் தோண்டியபோது செம்பாலாய பல வாய்ச்சிகளும் அம்பு, வேல், போன்ற எறிபடைகளும் கிடைத்தின. ‘ஷாஜஹான்பூர்’ கோட்டத்தில் செம்பாலாய ஈட்டிமுனை ஒன்று கிடைத்தது. இந்தச் செம்பு ஈட்டி இப்பொழுது இலக்ஷ்மணபுரி-பொருட் காட்சி நிலையத்தில் காட்சி அளிக்கின்றது. இதுபோல, ‘இட்டவா’ கோட்டத்தில் கிடைத்த பிறிதோர் ஈட்டி இப்பொழுது பிரிட்டிஷ் பொருட்காட்சி நிலையத்தில் உள்ளது. பிறிதோர் இடத்தில் மனித உருவம் போன்ற கருவி ஒன்றும் நீண்ட கனத்த வாள் ஒன்றும் கிடைத்தன. கங்கை ஆற்றங்கரையில் உள்ள ஓரிடத்தில் பல அம்பு முனைகளும் கல்லுளிகளும் கிடைத்தன. கான்பூர் கோட்டத்தில் சில இடங்களில் செம்பாலாய மனித உருவங்களும் அம்பு முனைகளும் ஈட்டிகளும் கல்லுளிகளும் கிடைத்தன. பிறிதோரிடத்தில் சிறுத்துக் குறுகிய உளி ஒன்று கிடைத்தது. இஃது 12.5 செ. மீ. உயரமுடைய கல்லுளி ஆகும்.