பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

53


சிலர் கூடி ஓர் இயக்கம் தோற்றுவித்துள்ளனர். அவ்வியக்கத்தினர், தாங்கள் கண்டுபிடிக்கும் புதுமைகளையெல்லாம் அவ்வாறு ஆங்காங்கே படம் பிடித்துச் சென்று, அவற்றிற்கு உரிய விவரங்களுடன் திங்கள்தோறும் ஒர் இதழாக வெளியிட்டு வருகின்றனர்.மற்றொரு பிரிவினர் உலகிலுள்ள உயர்ந்த மலைகள் மீதேறி ஆங்குக் கிடைக்கும் அற்புத விவரங்களைச் சேர்த்து வெளியிட்டு வருகின்றனர். உலகில் மிக உயர்ந்ததும், இதுகாறும் எவராலும் அதன் உச்சியில் சென்று காணுதற்கு இயலாததுமாக விளங்கிப் பெருமை பெற்றிருக்கும் இமயமலைமீது ஏறுதற்கு மேனாட்டு அறிஞர் பலர் முயன்றுள்ளனர்; இன்றும் முயன்று வருகின்றனர். மற்றும் ஒரு கூட்டத்தினர் கடலின் அடிப்பகுதிகளிற் சென்று, அங்கு வாழும் உயிர்களின் அற்புதச் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்து, அவற்றினை வெளிப்படுத்தி வருகின்றனர். இங்ஙனமே நிலத்தை அகழ்ந்து மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் பல பண்டைப் பொருள்களை வெளிப்படுத்தி ஆராய்ச்சி செய்வதிலும் அம்மேனாட்டு மக்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

நம்மவர் கடமை

மேனாட்டாரைப் போல நம் நாட்டுச் செல்வர்களும் அறிஞர்களும் இத்தகைய துறைகளில் ஆர்வங் காட்டி உற்சாகமும் ஊக்கமுங் கொண்டு உழைத்தால், பிற நாடுகளைவிட நம் நாடு பல வகையான அற்புத விவரங்களை உலகுக்கு விளக்கி வியக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.