பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மொஹெஞ்சொ - தரோ


அடியில் உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில் நிரம்பித் தெருக் கால்வாயில் கலக்கும். அந்நீருடன் வந்த குப்பை கூளங்கள் தாழியின் அடியிலேயே தங்கி விடும் நகராண்மைக் கழகப் பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர். ‘ஆ! இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாக யாம் கண்டதில்லை; கேட்டது மில்லை’ என்று சார் ஜான் மார்ஷல் போன்றார் கூறிப் பெரு வியப்பு எய்தியுள்ளனர். இவ்வியத்தகு முறை, நாகரிகம் மிகுந்த இக்காலத்திலும் சென்னை, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் உண்டே தவிரப் பிற பட்டணங்களில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. இவ்வரிய கால்வாய் அமைப்பு முறை 5000 ஆண்டுகட்கு முற்பட்ட மக்களால் கைக்கொள்ளப்பட்டிருந்தது எனின், அவர் தம் அறிவு நுட்பமும் சுகாதார வாழ்வில் அவர்க்கிருந்த ஆர்வமும் வெள்ளிடை மலையாம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் நிலத்தின் அடியில் சாக்கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மொஹெஞ்சொ-தரோவில் தரைமீதே சாக்கடைகள் கட்டப் பட்டுள்ளன. இந்நகரத்துச் சாக்கடை அமைப்பு முறையே நாளடைவில் பாதாளச் சாக்கடைகளாக மாறியுள்ளது என்பதும் கவனித்தற் குரியது.

சுவருக்குள் கழிநீர்க் குழை

மேன்மாடங்களிலிருந்து வரும் கழிநீரைக் கீழே உள்ள தாழியிற் கொண்டு சேர்க்கச் சுட்ட களிமண்ணாலாய பெரிய குழைகள் சுவர் அருகில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில பெரிய வீடுகளில் இக்குழைகள் வெளியே தோன்றாதவாறு சுவருக்கு உள்ளேயே அமைந்திருத்தல் வியப்பினும் வியப்பாகும். தாழியின் அருகில் உள்ள இக்குழைகளின் வாய் 8 செ. மீ. அகலமும் 10 செ. மீ. நீளமும் உடையனவாக இருக்கின்றன.