பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

63


செல்லும் ஒழுங்கான கால்வாய்கள் அமைந்திருத்தல் வேண்டும். வீட்டு அசுத்தப் பொருள்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் எல்லா வகை வசதிகளும் நன்கு அமைந்திருத்தல் வேண்டும்; ஒர்ோ வழி மக்கள் கலந்து இன்புறத் தக்க பொது இடங்கள் இருத்தல் வேண்டும். வெள்ள நீரை உடனுக்குடன் வெளிக்கொண்டு செல்லத்தக்க பெரிய சாக்கடைகள் நன்முறையில் அமைந்திருத்தல் வேண்டும் கழிநீர்ப்.பாதைகள் மூ ப்பட்டிருத்தல் மிக்க அவசிய மாகும்.இத்தகைய எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நகர்மே சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரம் எனப்படும். இவ்வசதிகள் அனைத்தும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்தன. எனவே, இந்நகர மக்கள் சிறந்த நாகரிகத்தைப் பேணிய பெருமக்கள் என்னலாம். இந்நகர ஆட்சியினர், அக்கால உலகில் இருந்த பிற நகர ஆட்சியினரைவிட மிக உயர்ந்த அறிவுடையவர் என்னல் மிகையாகாது.

சுகாதாரம் ஒரு பால் இருப்ப, நகரின் பல பாகங்களில் காவற். கூடங்கள் இருந்தன என்பதிலிருந்து, நகர ஆட்சியினர் நகரத்தைப் பாதுகாத்த முறையும் நன்கு விளங்கும். பல பெரிய தெருக்களின் கோடிகளில் இத்தகைய காவற் கூடங்கள் அமைந்திருந்தன. மொஹெஞ்சொ-தரோ வாணிபம் மிகுந்த நகரம் அன்றோ? அங்கு வணிகர் தங்குவதற்காகப் பெரிய கட்டிடங்கள் இருந்தன. அவற்றின் அருகில் காவற் கூடங்கள் இருந்தன. வாணிபப் பொருள்களைச் சேமித்து வைக்க விடுதிகள் பல இருந்தன; வெளிநாட்டு வணிகரும் உள்நாட்டு வணிகரும் செல்வப்பெருக்கு உடையவர்கள். ஆதலின், பொருளுக்கும் செல்வத்துக்கும் ஊறு நேராதிருத்தற் பொருட்டே நகர ஆட்சியினர் ஆங்காங்குக் காவற் கூடங்களை அமைத்துக் காவலாளிகளை வைத்து, நகரத்தைக் காத்து வந்தனர்.

நகராண்மைக் கழகத்தில் பெரும்பாலார் வணிகராகவே இருந்திருத்தல் வேண்டும். என்னை? இந்நகரம் வாணிபப். பெருக்க முடைய நகரமாதலின் என்க. மோரியர் ஆட்சிக்