பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. கட்டிடங்கள்

கட்டிட அமைப்பு முறை

மொஹெஞ்சொ-தரோ மக்கள் அகன்ற காற்றோட்டம் மிக்க தெருக்களை அமைத்து, நகர அமைப்பில் தங்கட்கிருந்த பண்பட்ட அறிவை உலகத்திற்கு உணர்த்தியது போன்றே, கட்டி அமைப்பு முறையிலும் தங்களுக்கு இருந்த பண்பட்ட அறிவைத் தங்கள் கட்டிடங்களின் வாயிலாக விளக்கியுள்ளனர். அப்பெருமக்கள், தங்கள் கட்டிடங்கட்குச் சுட்ட செங்கற்களையும் உலர்ந்த செங்கற்களையும் பயன்படுத்தி உள்ளனர். மழை, வெயில், வெள்ளம், புயற்காற்று இவற்றுக்கு எளிதில் ஆட்படுபவை கட்டிடங்களின் புறச் சுவர்களே ஆகும். ஆதலின் அவ்வறிஞர்கள், அப்புறச் சுவர்களைச் சுட்ட செங்கற்களாலேயே அமைத்துள்ளனர். மேற் சொன்னவற்றால் துன்புறுத்தப்படாத உட்புறச் சுவர்களை உலர்ந்த சூளையிடப்படாத செங்கற்களால் அமைத்துள்ளனர். அவர்கள் இக்காலத்திய சிமென்டை அறியார்: கான்க்ரீட் என்பதையும் அறியார். ஆதலின், அக்கால முறைக்கு ஏற்றபடி களிமண் சாந்தையே சுவர்களின் மேற்பூச்சாகப் பயன்படுத்தினர். சில இல்லச் சுவர்களைத் தவிடு கலந்த களிமண் சாந்தால் மெழுகியுள்ளனர். சுவர், தரை, கூரை இம்மூன்றும் களிமண் சாந்தால் ஆனவை. அவர்கள் மர உத்திரங்களைப் போட்டு அவற்றின் மீது நாணற்பாய் பரப்பி, அப்பாய்கள் மீது களிமண் சாந்தைக் கனமாய்ப் பூசிக் கூரை அமைத்து வாழ்ந்தனர்; உத்திரங்களை நுழைப்பதற்கென்றே சுவர்களின் தலைப்புறங்களில் சதுர வடிவில் சிறிய துளைகளை விட்டிருந்தனர். நாம் அவற்றை இன்னும் தெளிவுறக் காணலாம். கட்டிடப் புலவர்கள் சுவர்களையும் தரையையும் மேற்கூரையையும் ஒழுங்குபடுத்த மட்டப் பலகையைப் பயன்படுத்தினர். அப்பலகைகள் பல மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. அவை பல அளவுகள் உடையனவாக உள்ளன. வீட்டுச் சுவர்கள், சாளரங்கள் வாயிற்படிகள் முதலியன ஒழுங்காக அமைந்திருந்ததிலிருந்து,