பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மொஹெஞ்சொ - தரோ


வேண்டும் அன்றோ? அந் நோக்கம் பற்றியும் இச்சுவர்கள் இங்ஙனம் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறலாம். ஒரு பெரிய கட்டிடத்தின் புறச் சுவர் 172.5 செ. மீ. கனமுடையதாகவும், பிற சுவர்கள் 105 செ. மீ, 145 செ. மீ, 132.5 செ. மீ. கனம் உடையன வாகவும் அமைந்துள்ளன. இவை அவ்வப்போது புதுப்பிக்கப் பட்டன. ஆதலின், இங்ஙனம் வேறுபட்டுக் காண்கின்றன.

நெடுஞ்சுவர்கள்

கட்டிடச் சுவர்கள் ஓரளவில் இல்லை. பெரிய தெருக்களில் உள்ள கட்டிடச் சுவர்கள் 540 செ. மீ. உயரம் உடையனவாக இருக்கின்றன. குறுந் தெருக்களில் உள்ள கட்டிடச் சுவர்கள் 540செ.மீ. முதல் 750 செ. மீ. வரை உயரம் உடையனவாக உள்ளன. இந்நகரம் தோண்டப்பட்ட பொழுது, ஆராய்ச்சியாளர் மிகுந்த கவனத்துடன் மேற்பார்வை செலுத்தி வந்தமையின், இக்கட்டிடச் சுவர்கள் சிறிதும் பழுதுக்கு உள்ளாகாமல் காண்கின்றன. இவற்றை நன்கு கவனிப்பின், தரைமட்டம் உயர்த்தப் பட்டபோதெல்லாம் இவையும் உயர்த்தப்பட்டு வந்தன என்பதை எளிதில் உணர்தல் கூடும்.

பலவகைக் கட்டிடங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் பல திறப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. சில இரண்டு அடுக்கும் இரண்டிற்கு மேற்பட்டவையும் உடைய மாடிவீடுகள் சில அகன்ற முற்றங்களை உடைய ஒரே அடுக்கு உடையவை. இவ்வில்லங்கள் எல்லாம் மேலே தளம் இடப்பட்டவை; சுற்றிலும் கைப்பிடிக் சுவர்களை உடையவை; மேல்தளத்தில் பெய்யும் மழைநீர் உடனுக்குடனே கீழே விழக் குழைகளையுடையவை.இக் குழைகள் மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்டவை. சில கட்டிடங்கள் அங்காடிகளாக இருந்தவை; சில கோவில்கள் என்று கருதத் தக்கவை: பல எளியவர் இல்லங்கள்.