பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மொஹெஞ்சொ - தரோ


இவை நான்கு நான்காய்ச்சதுரம் சதுரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அப்பெரிய மண்டபம் பொது அங்காடியாக இருந்திருக்கலாம் என்று அறிஞர் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலர், ‘பொது மக்களின் இறைவணக்கத்திற்குரியதாகவும், பொது வினைக்கு உரியதாகவும் இருந்திருக்கலாம்’, என்று கருதுகின்றனர். ஆயிரக்கணக்கான யாண்டுகட்கு முன் பயன்படுத்தப்பட்ட ஒன்றைப்பற்றி இங்ஙனம் பலதிறப்பட்ட கருத்துக்கள் எழுதல் இயல்பன்றோ?

சில இடங்களில் அறைக்குள் அறையாகப் பல இல்லங்கள் காண்கின்றன. அவை அங்காடிகளாக இருத்தல் வேண்டும் என்றும், உள்ளறைகள் கடைச் சாமான்கள் வைத்தற் குரியவை என்றும், அறிஞர் எண்ணுகின்றனர். வேறு சில இல்லச் சுவர்களைச் சுற்றி 120 செ. மீ. அகலம் தளவரிசை இடப்பெற்ற மேடைகள் காணப்படுகின்றன. அவை சில்லறைக் கடைகள் வைக்கப் பயன்பட்டவை என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். சிலர், ‘அவை வெள்ளப் பாதுகாப்புக்கென்றே உயர்த்தப் பட்டவை’ என்று எண்ணுகின்றனர்.

கள்ளுக்கடையோ? தண்ணீர்ப்பந்தலோ? உண்டிச்சாலையோ?

சில இடங்களில் பெரிய அறைகளைக் கொண்ட கட்டிடங்கள் சில நிலத்தில் அழுந்திப் பதிந்துள்ளன.இவை பெரும்பாலும் தெருக் கோடிகளிற்றாம் அமைந்துள்ளன.இவற்றுள் களிமண்ணால் செய்து சூளையிடப்பட்ட பெரிய தாழிகள் பல தரையிற் புதைந்து கிடந்தன. இவை கள்ளுக் கடைகளாக இருந்திருத்தல் வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். தீக்ஷத் போன்றோர், ‘இவை நீர் மோர், தண்ணிர் முதலிய பானங்களை வழிப்போக்கர்க்கு விலையின்றி வழங்கும் அறச்சாவடிகளாக இருந்திருத்தல்வேண்டும்’, என்று கருதுகின்றனர். ‘இவை நகர மாந்தர் ஒன்றுகூடி அளவளாவுதற்கமைந்த உண்டிச் சாலைகளாக இருக்கலாம்’ என்று டாக்டர் மக்கே கூறுகின்றார்.