பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. கிணறுகள் - செய்குளம் - செங்கற்கள்

5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள்

மொஹெஞ்சொ-தரோவில் பெரும்பாலும் வீட்டுக்கொரு கிணறு இருந்ததெனக் கூறலாம். ஆராய்ச்சியாளர் நகரத்தைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தும்பொழுது பல கேணிகள் இருத்தலைக் கண்டனர். ஆனால் அவை அனைத்தும் துார்ந்து கிடந்தன. ஹரப்பாவில் அறிஞர் வாட்ஹ் என்பார் ஆராய்ச்சி நிகழ்த்திய போது ஒரு பெருங் கிணற்றில் நீர் இருத்தலைக் கண்டார். அக்கிணற்றில் 245 செ.மீ. உயரம் தண்ணீர் இருந்ததாம். அவ்வறிஞர் அதனைத் தூய்மை செய்து அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்க்குப் பயன்படுமாறு ஏற்பாடு செய்தனராம். ஹரப்பாவில் பிறிதோர் இடத்தில் 180 செ. மீ. சுற்றளவுடைய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல கிணறுகள் நகர அழிவினால் அழிந்து விட்டன. பல இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் மறைப்புண்டன.

இன்றும் சுரப்புடைய கிணறுகள்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள கிணறுகள் 107.5 செ.மீ. சுற்றளவு முதல் 270 செ.மீ. சுற்றளவு வரை பல திறப்பட்டனவாக இருக்கின்றன. அவற்றுள் பல மண்ணுள் புதைந்துவிட்டன. ஆராய்ச்சியாளர் அவற்றைக் கண்டறிந்து அவற்றில் அடைந்துள்ள மண் கல் முதலியவற்றை அப்புறப்படுத்தி, சகதியை நீக்கித் தூய்மை செய்யும் வேலையில் ஈடுபட்டனர். சில கிணறுகள் நன்னீர்ச் சுரப்புடையனவாகக் காணப்பட்டன. அந்நீரே அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்க்கும் தொழிலாளர்க்கும் உண்ணவும் குளிக்கவும் உரியதாயிற்று.கேணி நீரைப் பயன்படுத்துவதற்கு முன் அவர்கட்குத் தேவைப்பட்ட நீர் 3கிமீ தொலைவிலிருந்து வண்டியில் கொண்டுவரப்பட்டது. இப்பொழுது அத்தொல்லை