பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னென்று கூறுவதோ? என்றாலும்--- பம்பிப் பதுங்காமல் பயந்து ஒடுங்காமல் வம்புக்கு வம்புசெய் வழிசெய்து, அன்றொருநாள் செம்பாதி ராத்திரியில் சிந்தித்தேன் ; சிந்தித்தேன் ; சிந்தைச் சிலிர்ப்புற்றேன். கொம்பனையார் காதலுக்காய்க் கூடுவிட்டுக் கூடுசென்று, கம்பத் திருமகனைக் காதலனாய்க் கற்பித்து, கச்சணிந்த மாதர் கற்புக் கணிகலமாம் அச்சம், மடம், நாணம் அத்தனையும் கடன் வாங்கி, மிச்சமுள்ள பெண்குலத்தின் மென்மைக் குணத்தையெலாம் சொச்சக் கணக்குக்குச் சொகுசாக ஈடுகட்டி வச்சிவச்சிப் பார்த்தாலும் வாலை இளங்குமரிக் காதல் பிறந்திடுமோ? கவிதை சிறந்திடுமோ? அவ்வேளை- வேனல் வெது வெதுப்போ? விரகத்தின் செந்தழலோ?