பக்கம்:ரமண மகரிஷி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. இளமையில் ரமணர்!

ரமணர் இளமைப் பருவத்தில் அறிவு நுட்பத்துடனும், புத்திக் கூர்மையுடனும் இருந்தார். வீட்டில் புத்தகத்தோடு காணப்படமாட்டாரே தவிர, வகுப்பில் குருவுக்கும் விஞ்சிய மாணவனாகவே காட்சியளிப்பார். அவருடன் இணைந்து வகுப்பில் கல்வி பயிலும் மாணவ நண்பர்கள் யார் எதைக் கூறினாலும், அதைக் கவனமாகக் கேட்டு மனத்திலிருத்திக் கொள்வார். அது போலவே ஆசிரியர் வகுப்பில் எந்தச் செய்யுளை அல்லது பாடத்தைக் கொடுத்தாலும், அவர் பின்னாலேயே அந்தச் செய்யுளுக்கான பிற அடிகளையும் பாடல்களின் கருத்துக்களையும் அடி பிறழாமலும், வாக்கியங்கள் மாறாமலும் ஒப்புவிக்கும் மனத் திறமை பெற்றவராக விளங்கினார்.

வீட்டிற்கு வந்தால் அவர் எங்கேயோ விளையாடிக் கொண்டிருப்பார். புத்தகம் எங்கோ ஒரு மூலையில் வீழ்ந்து கிடக்கும். எனவே, ரமணர் என்ன படித்தார். எப்படிப் படித்தார்? எவ்வாறு படிக்காமலேயே பாடலின் கருத்துக்களைத் திருப்பிக் கூறிடும் சக்தி பெறுகிறார் என்பதே வகுப்பு ஆசிரியருக்கும் புரியவில்லை. வீட்டாருக்கும் தெரியவில்லை. ஏதோ ‘சித்தம் போக்கு சிவம்போக்கு’ என்பார்களே அதைப்போல, ரமணருடைய கல்விப் போக்கே ஒரு தனியான வழியாக இருந்தது.

ரமணர் போக்கு இப்படி என்றால், அவரது அண்ணன் தம்பிகள் போக்கு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுவது இயற்கைதானே! அவருடைய தந்தையாரும், புகழ்பெற்ற வழக்கறிஞரும், அன்னதாதா எனப்படுபவருமான சுந்தரமய்யரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/15&oldid=1280083" இலிருந்து மீள்விக்கப்பட்டது