பக்கம்:ரமண மகரிஷி.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ரமண மகரிஷி


மண்டப ஓரமாக வெங்கட்ராமன் ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். சிறுவனல்லவா? பாவம்!

அந்த மண்டப மூலையில் உட்கார்ந்தான் என்று கூறினோம் அல்லவா? அவன் அங்கே அமர்ந்த பின்பு தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அந்தத் தியானத்தில் அவனுக்கு அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் திவ்விய ஜோதி தரிசனம் தெரிந்தது போன்ற ஓர் உணர்வைப் பெற்றான்.

வெங்கட்ராமன் கனவிலே தெரிந்த திவ்விய ஜோதி எப்படி வந்தது என்பது எல்லாம் ஆண்டவன் செயலே; அவனையன்றி ஒரு பொருளும் அசையாது என்பது ஆன்றோர் சொல்லாயிற்றே என்று நம்பினான். ஆனால், எந்த ஒரு தெளிவான விடையும், விளக்கமும் விளங்காமல் அந்தக் கனவிலேயே மிதந்தபடியே மீண்டும் சமாதியில் மூழ்கினான்! மின்சாரக் கனவு ஓடியபடியே இருந்தது!

கொஞ்ச நேரம் கழிந்தது; கோயில் குருக்கள் உள்ளே இருந்து வந்தார். ‘யாரப்பா நீ, என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு. எழுந்திரு கோயில் கதவை மூடவேண்டும்! வெளியே போ!’ என்று அவர் வேலை செய்த சோர்வால் களைத்து வெறுப்போடு பையனிடம் பேசினார்!

ஐயர் போட்ட ஓசையால், அரண்டு எழுந்துவிட்ட சிறுவன் தியானம் கலைந்தான். குருக்களை நோக்கி ‘பிரசாதம் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டான். கெஞ்சினான்! பசி, பாவம்!

‘பிரசாதமா! ஒன்றுமில்லையே தம்பி! என்று குருக்கள் கையை விரித்து விட்டு, போ தம்பி நேரமாகிறது’ என்றார்!

பாவம் பசியால் வருந்திக் கொண்டிருந்த வெங்கட்ராமன், குருக்கள் முகத்தைப் பார்த்து நான் இன்றிரவு இங்கே தங்க அனுமதிப்பீர்களா? என்று பணிவுடன் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/38&oldid=1280528" இலிருந்து மீள்விக்கப்பட்டது