பக்கம்:ரமண மகரிஷி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

37




‘கோயில் கதவை மூட வேண்டும் வெளியே போ என்று கூறினால், கேட்பதையே திரும்பவும் கேட்கிறாயே, போ’ என்று கோபமாகத் தடித்த குரலிலே குருக்கள் சொன்னார்.

வருத்தத்துடன் வெளியே வந்த சிறுவனைப் பார்த்த அங்கு வேலை செய்யும் மற்றொருவன், தம்பி இங்கே இருந்து கீழூர் என்ற ஊர் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே போ பிரசாதம் கிடைக்கும் என்று கனிவுடன் சொல்லி வழியையும் காட்டி அனுப்பி வைத்தான்.

உடனே அந்தச் சிறுவன் பசி வேகத்தோடு வேகமாக விரைந்து நடந்து அந்த மனிதன் கூறிய கீழூர் கோயிலுக்கு வந்தான். அந்தக் கோயில் அர்ச்சகர் அங்கே நின்று கொண்டிருந்தார் ஆலயச் சிலையருகே, அவரைக் கண்டு நமஸ்காரம் என்றான். பசிக்கிறது ஏதாவது பிரசாதம் கொடுப்பீர்களா? என்று அவன் கேட்டான்! அந்த அர்ச்சகர் அவன் என்ன கேட்கிறான் என்பதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமலே, வழக்கம்போல எல்லாருக்கும் சொல்லுவதைப் போலவே ‘இல்லை, இல்லை’ என்று கையால் சைகை காட்டிவிட்டு உள்ளே போய்விட்டார்.

என்ன செய்வது? பசியோ வாட்டுகிறது! ஒரு கணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தபோது, வேறு ஒரு அர்ச்சகர் பெரிய அர்ச்சகரைப் பார்த்து எனக்குரிய பங்குப் பிரசாதத்தை அந்தப் பையனுக்குக் கொடும் என்றார். சற்று கோபமாக! உடனே பெரிய அர்ச்சகர் ‘இங்கே என்னிடம் இல்லை தம்பி, அதோ அந்தப் பிராமணர் வீட்டுக்குப் போ கிடைக்கும். என்றார்.

வெங்கட்ராமன் தள்ளாடித் தள்ளாடி அர்ச்சகர் சொன்ன வீட்டு வாசற்படியருகே போய் நின்றான். பசி மயக்கம்! அவனுக்கு. வாய் திறந்தும் கேட்க முடியாத களைப்பு. அப்படியே அங்கேயே, மயக்கத்தோடு கீழே விழுந்தான் சிறுவன். பாவம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/39&oldid=1280530" இலிருந்து மீள்விக்கப்பட்டது