பக்கம்:ரமண மகரிஷி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ரமண மகரிஷி



கணபதி முனீந்திரர் சிறிது காலம் ரமண மகரிஷியோடு தங்கியிருந்தார். அப்போது மகரிஷி அவரிடம் சமஸ்கிருத மொழி, தெலுங்கு மொழி ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். அவை மட்டுமன்றி வேறு சில மொழிகளையும் புரியுமளவுக்குப் படித்தார். குறிப்பாக, அவர் தமிழ் மொழியில் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்று, முதன் முதலாக ‘உள்ளத்து நாற்பது’ என்ற நூலைக் கவிதை வடிவிலே எழுதினார்.

அந்தக் கவிதை நூலை கணபதி முனீந்திரர் சமஸ்கிருத மொழியில் ‘சத்தரிசன்’ என்று பெயரிட்டு மொழியாக்கம் செய்தார். அதற்கு உரை எழுதியவர் கபாலி சாஸ்திரி என்ற சீடராவார். இந்த நூலுக்குப் பிறகு ரமண மகரிஷி பல நூல்களை எழுதினார். அவை பல உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டன.

கணபதி முனீந்திரர் தனக்கு எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் ரமணரிடம் விடை தெரிந்து கொண்டார். அவற்றுள் ஒன்று ‘அஹம்’ பற்றியதாகும்.

‘அஹம்’ பற்றி விசாரணை செய்வதால், விருப்பங்கள் நிறைவேறுமா? அல்லது மந்திரங்களும் தவமும் தேவையா? என்பதைப் பற்றி முனீந்திரர் ரிஷியைக் கேட்டார். அதற்கு அவர் ‘அஹம்’ பற்றிய ஆராய்ச்சியால் எல்லாவித சித்துகளும் கைகூடும். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு விட்டால், அந்த சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.

விரூபாட்சிக் குகையில் ரமணர் தங்கியருந்தபோது, நாட்டின் நானா பக்கங்களிலிருந்தும் மக்கள் ரமணரைக் கண்டு ஆசி பெற்றிட வருவார்கள். இந்த பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

இதைக்கண்ட குகையின் சொந்தக்காரர்கள் பக்தர்களிடம் பணம் வசூல் செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/74&oldid=1281218" இலிருந்து மீள்விக்கப்பட்டது