பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

ரோஜா இதழ்கள்

தாக இருந்தால் கூடவே படிச்சிக்கலாம். முதல்ல அவா பிரியத்தைச் சம்பாதிச்சுக்கணும், நீ. அப்புறம் அவளே வேற ஆளா இங்கே போட்டுட்டு உன்னைச்சித்து வேலைக்குன்னு வச்சிண்டு படிக்கவும் வசதி பண்ணுவா. நீ அவசரப்பட்டு ஹோமுக்குப் போயிடாதே. அதனாலதான் ஃபாரத்தை வாங்கி அப்படியே வச்சிட்டேன்...”

சாதியையும் கோத்திரத்தையும் அழிப்பதென்றால் எதைக் குறிப்பிடுகிறாள் என்று மைத்ரேயிக்குப் புரியவில்லை.

இந்தச் சாதியில் பிறந்ததற்காக, அவள் என்ன நன்மை கண்டு விட்டாள்? அவள் எதற்காக, எந்த மேன்மையை எண்ணி அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்? மாற்றான் பாசறையில் தலைநீட்டிவிட்டு வந்தாற்போல் அவள் வந்திருக்கிறாள். அவள் பிறந்த சாதியின் பெயரைச் சொல்லிக் கொள்ளவே இப்போது அவள் கூசிக் கொள்கிறாள்.

மதுரம் தொடர்ந்து பேசுகிறாள்:

“பிழைக்க வழி இல்லாமல் ஒரு அவலத்தைக் கட்டி அழகு, அந்தஸ்து, படிப்பு ஒண்ணும் இல்லாம இருந்தும் நான் இந்தச் சாதிப் பிறப்பினால்தான் பிழைக்கிறேன். தெரிஞ்சுக்கோ? இன்னிக்கு இந்தச் சமையல் ரூமில் வந்து சுவாதீனமாகப் புழங்கவும் இலைபோட்டுச் சாப்பிடவும் முடியிதுன்னா , அதுக்குக் காரணம் இந்த சாதிப் பிறப்புதான். எந்தத் தொழிலுக்கு விலை இல்லாமப் போனாலும் இதுக்குக் கிராக்கி போகாது. நான் சிவனேன்னு இங்கே ருசி ருசியா சமச்சுப் போட்டுண்டு நானும் வயிறு வாடாமல் சாப்பிட்டுக் காலம் தள்ளுவேன். யாரை என்ன சொன்னாலும் லோகா என்னைத் தள்ளி நில்லுனு சொல்ல மாட்டாள். ஆனா, குடும்பம்னு பின்னோட ஒண்ணு ஒட்டிண்டிருக்கே. நீ வாணாபாத்திண்டிரு. இன்னிக்குச் சாயங்காலம் நான் போகாட்ட காலமே ஜிட்டுவோ பொம்மியோ வந்துடும். அப்புறம் பெரியவன்; பின்னே அப்பனும் வந்துடுவான். வந்தா சும்மா இருப்பாளா? உக்கிராணத்தில் சாமான் இருக்காது; மேசையில் வச்ச பண்டம் போயிடும். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/104&oldid=1101959" இலிருந்து மீள்விக்கப்பட்டது