பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

103

குடும்பத்தைப்பத்தி நானே குறை சொல்லிக்கிறதிலே என்ன தப்பு இருக்கு? என் தலை எழுத்து...”

மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

“அவாள்ளாம் இங்கே வரக்கூடாதுங்கறதுக்காகத்தான் என்னையே இங்கே கூப்பிட முடியறதில்ல அவளால், ஒரு தெவசம் திங்கள்னாக்கூட நான் வருவேன். உடனே போயிடுவேன். ஏதோ தட்டி முட்டிக் கேட்டால் பத்து அஞ்சு தருவாள். ஒரு பழசு, சாயம் போனதுன்னு கொடுப்பாள்... சாதத்தை இலையில் போட்டுட்டு இப்படிப் பேசறேனேன்னு பார்க்காதே. உங்கக்காவும் அத்திம்பேரும் பண்ணினது ரொம்பத் தப்பு. நம்ம ஜாதிய விட்டு, குடும்பத்தை விட்டு ஒரு பொண்ணு போனா, அது எவ்வளவு நஷ்டம்னு அவாளுக்குத் தெரியல. கிறிஸ்துவா விட்டுக் கொடுக்கிறாளா? வேற எந்த சாதியாளும் விட்டுக் கொடுக்கிறாளா, இப்படி?”

அவளுடைய சொற்கள் நறுக்கு நறுக்காகத் தெறித்து விழுந்தாற் போல் இருக்கின்றன. வயிற்றுக்கில்லாமல் புரண்டு புரண்டு சமுதாயத்தில் பல படிகளிலும் சிதறிய நெல்மணிகளுக்காகத் தேடும் அனுபவத்தில் அவள் சேகரித்த முத்துக்கள் தாம் இப்படிச் சிதறுகின்றனவோ? வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பிவிட்ட அவளுக்கு ஒரு கண்ணைத் துடைத்து அம்மணி உலகம் காட்டினாள். இவள் இன்னொரு கண்ணைத் துடைக்கிறாளோ?

பள்ளிக்கூடத்துக்குச் சென்று ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளைப் பற்றியும், பிரிட்டிஷ் அரச குடும்ப வம்சாவளியைப் பற்றியும் படிப்பாளாக இருக்கும். தீரங்களை உருப்போடுபவளாக இருக்கும்.

ஆனால் ஒரு இளம் பெண் இயற்கையின் பருவக்காற்றை எதிர்க்காமலும் சாதகமாகச் சென்று படுகுழியில் விழாமலும் சாமர்த்தியமாக வாழ்க்கைப் படகை வலித்துச் செல்லக் கற்பிப்பார்களா?

தாயும் தகப்பனும் இருந்திருந்தால் தனக்கு நேரிட்டாற் போன்றதொரு விபத்து வாழ்க்கையில் ஏற்பட்டிராதென்றே மைத்ரேயி நம்புகிறாள். அவளுடைய வகுப்பில் எத்தனையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/105&oldid=1101961" இலிருந்து மீள்விக்கப்பட்டது