பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

105

மட்டும் அருந்திவிட்டு மீண்டும் வெளியே செல்கிறாள். அநுசுயாவுக்கு முழு வேலையும் முடியவில்லை. எனினும் மாலை ஏழு மணிக்குள் அவள் விடுதிக்குப் போய்விடவேண்டும் என்ற விதியை மீறாமல் காபி சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுப் போகிறாள்.

இரவுக்குப் பருப்பு சாம்பார், ரசம், பீன்ஸ் பொரியல் அப்பளம், பெரியவருக்குக் கோதுமைத் தோசை, சட்னி.

லோகா, வீடு திரும்புவதற்கு இரவு மணி பத்தாகிறது. எட்டரை மணிக்கே மற்றவர் உண்டு முடித்துவிட்டாலும், எஜமானி அம்மாளின் வரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். அப்போது பாதி எலுமிச்சம் பழங்களை நறுக்கி உப்பிட்டு வைக்கிறாள் மதுரம்.

லோகா வீடு திரும்பியதும் தொலைபேசியண்டை அமர்ந்து வெகுநேரம் யாருக்காகவோ காத்திருந்து பேசுகிறாள். பிறகு அவள் உண்ண வருகிறாள். சோறில்லாமல் வெறும் ரசம், பீன்ஸ் பொரியல், அப்பளம், மோரை மட்டும் கொள்கிறாள். பிறகு மாடிக்குச் செல்கிறாள். பருமன் குறைய ‘டயட்’ இருக்கிறாளாம்!

அவர்கள் இருவரும் உண்டுமுடித்து, கோகிலாவுக்கு மீதியைக் கொடுத்துவிட்டுச் சமையலறையைக் கழுவி விடு கின்றனர்.

மணி பதினொன்றாகிறது.

சாப்பிடும் கூடத்தை அடுத்து இடை அறையில் மதுரம் வினோலியம் சுருட்டொன்றைக் கொண்டுவந்து விரிக்கிறாள்.

ஆளுக்கொரு மனையும் தலைக்குக் கிடைக்கின்றன.

மைத்ரேயிக்கு நிம்மதியாக இல்லை.

“மாமி, என்னைப் பத்தி அவா ஒண்ணுமே கேக்கலியே? நீங்க நாளைக்குப் போயிட்டா நான் என்ன செய்வேன்?”

“கவலைப்படாதே, இந்த வேலை செஞ்சதால குறைச்சல் வந்து விடாது. லோகாவிடம் நான் சொல்லாமல் போக மாட்டேன்...”

“நீங்க இன்னும் நாலஞ்சு நாள் இருங்கோ மாமி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/107&oldid=1101964" இலிருந்து மீள்விக்கப்பட்டது