பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

ரோஜா இதழ்கள்

காப்பாற்ற, இரக்கம் காட்ட, ஈரம்கொண்டு கசிய உரிமை இருக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது?

திருவள்ளூரிலிருந்து முன்பு ஒரு முறை அவளுடைய தாய்க்கு எட்டிய உறவில் சின்னம்மாவாகக் கூடியவள் வந்தாள். மைத்ரேயியைப் பார்த்து திருஷ்டி வழித்துச் சொடுக்கிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். பிறகு அக்காவைப் பார்த்து, “இப்ப நன்னாயிருக்கிறயாடி குழந்தே? மாமியார்க்காரி போய்ச் சேந்தாளா? எமகாதகி, உடன் பிறந்தவன் சொத்லெல்லாம் வாங்கிண்டு, அவன் பெண்ணையே படுத்தி எடுத்தாளே!” என்று பிரலாபித்தது அக்காவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மூடிய பெட்டிக்குள்ளிருந்து பாம்பின் வால் வெளியே தெரிந்தாற் போலிருந்தது.

அத்திம்பேரை அவள் முன்பெல்லாம் உறவு முறை குறிப்பிட்டு அத்தான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாயிருந்தது.

அவளுக்குப் பன்னிரண்டு வயசுகூட நிரம்பியிருக்கவில்லை. அத்தான் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கையில் அவள் தோட்டக் கிணற்றில் குளித்துவிட்டு ஈரப் பாவாடையும் சோப்புப் பெட்டியுமாக வந்தாள்.

சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு, உயரக் கொடியில் இருந்த பாவாடையைக் கோல்கொண்டு தள்ளினாள். கோல் அவளுக்குச் சிறியதாக இருந்ததால் பாவாடையைத் தள்ளுவது கடினமாக இருந்தது.

“அத்தான், இந்தப் பாவாடையைத் தள்ளிக் கொடுங்களேன்?” என்று அவரிடம் வந்து அவள் கேட்டாள்.

அன்று அவளுடைய அக்கா, சமையலறையில் கூப்பிட்டு வைத்து அவளை அதட்டினாள். அந்தச் சொற்கள் அவளுடைய மலர் நெஞ்சில் தீக்கோடுகள் போல் பதிந்தன.

“ஏண்டி வயசாச்சு, கடாமாடுபோல வளர்ந்தாச்சு, அத்திம்பேர் உக்காந்திருக்கச்சே ஈரத்தோடு அங்கே என்ன வேலை? அத்தானாம் அத்தான்! நீ ஒண்ணும் உறவு சொல்லிக் கூப்பிட வேண்டாம்! அத்திம்பேர் உனக்கு அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/112&oldid=1101977" இலிருந்து மீள்விக்கப்பட்டது