பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

111

வெக்கம், நாணம் ஒண்ணு கிடையாது. நீ இனிமே கூடத்திலே புருஷா உட்கார்ந்திருக்கறச்சே அரைகுறைத் துணியோடு வரக்கூடாது. கொல்லைப் புறமா வரதுக்கென்ன கேடு?”

ஒரு பெண் வளர்வது குற்றத்துக்குரிய செயல் என்று அவள் அன்று அறிவுறுத்தினாற் போலிருந்தது. அன்று மைத்ரேயி தனிமையில் அதை நினைத்து நினைத்து அழுதாள். அவளுக்கு வயசுக்கு ஒத்த தோழியரோ சகோதரிகளோ கூடக் கிடையாது. ரஞ்சனியோ அவளைவிட எட்டு வயசு மூத்தவள். அவளுக்கும் ரஞ்சனிக்கும் இடையில் அடுத்தடுத்து கருச்சிதைவுக்காளானாளாம் அவள் தாய். ஒரு குழந்தை பிறந்து இறந்து போயிற்றாம். அத்திம்பேரின் சகோதரி மக்கள் நீலாவும் மாதவியும் மைத்ரேயியைவிடப் பெரியவர்கள். அவர்கள் கொழு கொழுவென்றிருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் விடுமுறைக்கு அவர்கள் வடக்கிருந்து வருவார்கள். நீலா கையில்லாத ரவிக்கையும் சேலையுமாக அத்திம்பேருடன் குதித்துக் குதித்துத் தோட்டத்தில் பந்தாடுவாள். மாதவி முழங்கால் மேலோடு ‘ஸ்கர்ட் ப்ளவுஸ்’ ஃபிராக் போன்ற உடைகளே அணிவாள். அவர்களுடன் அத்திம்பேரின் தந்தை வழியில் ஒன்றுவிட்ட சகோதரர் மக்களும் விடுமுறைக்கு வருவார்கள். கல்லூரியில் படிக்கும் பையன்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ‘காரம்’ ஆடுவார்கள். ஒருவர்மீது ஒருவர் விழாத குறையாகச் சண்டை போடுவார்கள்; தொட்டுப் பேசுவார்கள். வீடே அதிரும் படியாகச் சிரிப்பார்கள். ஆண்வர்க்கம் என்ற கூச்சம் இயல்பாகவோ, செயற்கையாகவோ, நீலாவுக்கும், மாதவிக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.

மைத்ரேயி எந்த ஆணோடு அப்படிப் பழகியிருக்கிறாள்? தனக்கு முன் அம்மாவுக்குப் பிறந்த ஆண் குழந்தை உயிரோடிருந்திருந்தால் என்று எத்தனையோ நாட்கள் அவள் எண்ணிப் பார்த்து ஏங்கியிருக்கிறாள். அவளுடைய மாமா, எப்போதோ அவளை அழைத்து உறவு கொண்டாடியதுடன் சரி; அக்கா குடும்பத்தினருக்கும் அவருக்கும் விரோதம் இருந்ததால் ரஞ்சனி, சுமதி கல்யாணங்களுக்கு மட்டும் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/113&oldid=1101978" இலிருந்து மீள்விக்கப்பட்டது