பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

113

தெரியவில்லை. மதுரத்தைப்போல், அக்காவைப்போல், அவளுடைய அம்மாவைப்போல், ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் எல்லாருமே வெவ்வேறு அச்சில் பட்ட ஒரே களிமண்ணாகத்தான் இருக்கிறார்கள். அவளே, அவள் மட்டும் என்ன? ஒரு குறிப்பிட்ட வடிவத்துள் பத்திரமாக, வெளிநோக்கும் அழகு வாய்ந்ததாக இருக்கலாம் என்று பெரியோர் வகுக்கக் கூடிய நியதிக்கப்பால் சென்று எந்த வடிவத்தையும் சார்ந்து பெற இயலாதவளாகியிருக்கிறாள். தனித்து நின்று வடிவமாக இயங்கவும் துணிவும் உறுதியும் இல்லை.

அவளுக்கு என்ன வடிவம்? திருமணமாகி ஒருவனுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு வளைந்து கொடுத்துப் பெறுகின்ற குடும்ப நெருக்கத்துக்கோ, வாழ்வின் வளமைக்கோ ஏற்ற வகையில் உருவாகும் வடிவம்; ஒரு நல்ல குடும்பப்பெண் என்ற பெயரில் அடிபணிந்து தரையோடு தாழ்தல்; கணவனைக் கண்களுக்குத் தெரியாமல் சூத்ரக் கயிறுகளால் ஆட்டுபவள்; அல்லது தன் ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் கிளர்ந்து கொதித்து, அதை வேறொரு முனையில் கொட்டிக்கொண்டு தன்னைத்தானே மறந்து வாழும் வடிவம்.....

மதுரம் மாமி ஏன் கட்டுக்களை அறுத்துக்கொண்டு வெளியேறி விடக்கூடாது? கணவனிடம் காதலா, மகனிடம் பாசமா?

வெளிப்பார்வைக்கு வெறுப்பூட்டக்கூடியதாக அழகற்று இருந்தாலும் அந்தப் பிணைப்புகள் உறுதியாக இருக்கின்றன. தன் தாயானாலும் பெற்றுப் பெற்றுப் பலவீனமாய் நைந்தவள். உடலுழைத்துப் பிழைக்கவும் இயலாமல் கல்வித்தரம் கொண்டு காலூன்றி நிற்கவும் இயலாமல் கட்டுண்டிருந்ததாகச் சொல்லலாம்.

மதுரம் மாமியோ உடலுழைப்பினால் தனித்துப் பிழைக்கக் கூடியவள். அப்படியும் இந்தப் பிணைப்பை அவள் அறுத்துக் கொண்டு செல்லவில்லை. வறுமையிலும் பாரம்பரியத் தொடர்பாக வந்திருக்கும் நம்பிக்கைகளும், கோட்பாடுகளும்,

ரோ. இ - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/115&oldid=1101981" இலிருந்து மீள்விக்கப்பட்டது