பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ரோஜா இதழ்கள்

போறது; கான்டீனில் கண்டதைத் தின்பது, வயிறு வலிக்காமல் என்ன செய்யும்?”

“நான் காண்டீனுக்குப் போறேனா? நீ பாத்தியா? நீ சுத்த தொண தொணப்பாயிட்டேம்மா! என் ஹெல்த்தைப் பாத்துக்க எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டாம்!” என்று கத்துகிறான்.

லோகா முறைத்துப் பாத்துவிட்டுச் சமையலறைக்குள் வருகிறாள். மெல்லிய பூக்கள் அச்சிட்ட கதர்பட்டுச் சேலையில் அவள் வயசு குறைந்து போயிருக்கிறது. கூந்தலில் ஓர் நரை இழை கூடத் தெரியவில்லை. அரைக்காது மூடத் தளர்த்தியாக, வடைக் கொண்டை போட்டுக் கொண்டு, சாய்வாக ஒரு மலர்ந்தும் மலராததுமான பட்டு ரோஜாவை செருகியிருக்கிறாள். முகத்தில் மெல்லிய பவுடர் பூச்சு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. செவிகளில் நான்கு வயிரப் பொடிக் கற்களும் நடுவில் சிவப்பும் வைத்த தோடு. கையில் மெருகு மின்னும் கைப்பை.

“ராஜா வராராம். சாப்பாட்டுக்கு வந்திடுவார். அவருக்குச் சப்பாத்தி பண்ணனும். மாவு ரொம்ப பழசாயிருந்தது. உள்ளே கோதுமை இருக்கு. குப்புசாமியிடம் எடுத்துக் கொடுத்து அரச்சிண்டு வரச்சொல்லி ரொட்டியோ, பூரியோ பண்ணிவை. பூரியாகவே இருக்கட்டும். இங்கிலீஷ் காயாப் பார்த்து வாங்கிண்டு வரச்சொல்றேன். மசாலா போட்டு ஒரு கூட்டு பண்ணணும். மன்னி, நீ கொஞ்சம் கூட இருந்து சொல்லிக் கொடுத்துட்டுப் போ.”

“ஆகா. நான் பன்னண்டு ஒரு மணிக்குத்தான் கிளம்பலான்னு இருக்கேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“ஒண்ணு ஒண்ணரை மணியாகும் நாங்கள் வர. குக்கரைத் திறக்காமல் சாதத்தை சூடாக வச்சிரு..” என்று சொல்லி விட்டுக் குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள் லோகா. அவள் வெளியே செல்வதை மைத்ரேயி படியில் நின்றபடியே பார்க்கிறாள்.

“ந்தா மைத்தி, வேடிக்கை பார்க்காதே. கோதுமையை கல்லிருக்கான்னு பாரு, மடமடன்னு...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/120&oldid=1101993" இலிருந்து மீள்விக்கப்பட்டது