பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

123

குடுத்தான். ரொம்பக் குணம். அதைத் திரும்பக் கேக்கத்தான்...”

மதுரம் தலையை ஆட்டுகிறாள்.

சாப்பிட்டுக் கைகழுவும்வரை மைத்ரேயி நிற்கிறாள். எல்லாவற்றையும் எடுத்துத் துடைத்துவிட்டு வருகிறாள்.

மதுரம் திடுமென்று மௌனமாகிவிட்டாற் போலிருக்கிறது.

“நீங்க போயிட்டா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாது போலிருக்கிறது மாமி!”

“பயப்படாதே. தைரியமாயிரு. இது இப்படித்தான் தொணதொணக்கும். நீ ஒண்ணும் இது சொல்றதுன்னு தலை குளிக்க வேண்டாம் நிதம். ஈரத்துணிய நனைச்சுத் தலையில் வேடு கட்டிண்டு வெறும் புடவை மாத்திண்டு சமைப்பேன். எல்லாம் முடிஞ்சப்புறம் கடைசியிலே வெந்நீர் நிறைய வச்சிண்டு குளிச்சிட்டு வருவேன். பின்ன மார்கழி மாசத்திலே நாலு மணிக்குப் பச்சைத் தண்ணியில் குளிச்சிட்டுச் சமைக்க முடியுமா? போன வருஷம் நான் ராதா கல்யாணம் கழிந்து வந்தப்ப தைமாசத்துக் குளிர்வேற. இப்படி எலக்ட்ரி பாயிலர் வேற இல்ல. என்ன பண்ணுவதாம்?”

அன்றாடப் பழக்கவழக்கத்தில் கூடப் பாசாங்கா? கடவுளே!

“ராதா யாரு?”

“மூத்த பொண்னு. போன வருஷம் கல்யாணமாயி லண்டன்ல குடித்தனம் பண்றா. பெரிய வீட்டிலே எத்தனையோ நடக்கும். நான் முன்ன சொன்னாப்பல இருந்துக்கோ. லோகாவுக்கு நல்ல மனசு. உனக்குச் சம்பந்தமில்லாதது எதிலும் தலையிடாதே. நான் வரட்டுமா?”

மதுரம் உள்ளே வந்ததும் தயாராக வைத்திருந்த அரிசிப் பையையும் துணி மூட்டையையும் சுமந்து கொண்டு செல்கிறாள்.

மைத்ரேயி அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். நெஞ்சு கனக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/125&oldid=1102008" இலிருந்து மீள்விக்கப்பட்டது