பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

மேசை மீது அழகாகப் பூக்கள் அச்சிட்ட வெள்ளை விரிப்பு கஞ்சி முரமுரப்புடன் தொங்குகிறது. பெரிய பெரிய சம்பங்கிப் பூக்களைப் போன்ற வெண்மையான மலர்களை அழகிய தேன் வண்ணப் பட்டைக் கண்ணாடிக் குடுவையில் அநுசுயா செருகி வைத்திருக்கிறாள். அவள்தான் மைத்ரேயிக்கு உதவியாகச் சமையலறையில் பூரி இட்டுத்தந்து கறிக்குப் பக்குவம் பார்த்து, உணவைத் தயார் செய்திருக்கிறாள். பூக்கள் அச்சிட்ட நாப்கின் காகிதங்களை பெரிய மலர்களைப் போல் சிங்காரமாக மடித்து அலத்திச் செருகியிருக்கிறாள். பளபளக்கும் பீங்கான் தட்டுக்களையும் கரண்டிகளையும், அவள் அலங்காரமாக எடுத்து வைக்கிறாள். அநுசுயாவுக்கு அந்த வீட்டில் வெகுநாளையப் பழக்கம் இருக்கிறதென்று மைத்ரேயி ஊகித்துக் கொள்கிறாள்.

ராஜாவும் லோகாவும் உணவு கொள்ள வந்தமருமுன்பே பரபரப்பு மைத்ரேயியை ஆட்கொள்ளுகிறது. சேதுவும் அந்நேரத்துக்குக் கல்லூரியிலிருந்து வந்திருக்கிறான். அவனும் உணவு கொள்ள வருகிறான். குதிரை போல் ஸீஸரும் வருகிறது. ராஜாவை அது அருகில் வந்து மோந்து பார்க்கிறது.

“டோன் பீ நாட்டி, கம்ஹியர், ஸீஸர்....கோ! கோ டூ யுவர் ப்ளேஸ்!” என்று அதட்டுகிறான் சேது.

அது. வெளியே ஓடுகிறது.

“எட்டு மாசத்துக்குள் நல்லா வளர்ந்திருக்கே?....” என்று கூறுகிறான் ராஜா.

“ஹூம், கரம் மசாலா மணம் வரதே? அநுசுயாதான் சமையல் பண்ணாளா?”

அநுசுயா தலைகுனியப் புன்னகை செய்துகொண்டு ‘ஜக்’கில் குடிநீர் கொணர்ந்து வைக்கிறாள்.

லோகா மகனை சற்றே கடுமை தெரிய நோக்குகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/126&oldid=1102011" இலிருந்து மீள்விக்கப்பட்டது