பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

ரோஜா இதழ்கள்

அவளே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் உள்ளத்தை வெளியிடுகிறாள். ராஜா லோகாவைப் பார்க்கிறார்.

“எனக்கு ஒரு யோசனை, சீரியஸாகக் கொஞ்ச நாளாக நினைக்கிறேன்..”

“சொல்லுங்க ப்ளீஸ்...” என்று சேது சொல்கிறான்.

லோகாவோ, மௌனமாக அவரைப் பார்க்கிறாள்.

“வரவர நம்ம பார்ட்டிக்கு மாஸ் காண்டாக்டே குறைஞ்சு போயிட்டிருக்கு. முழுநேர பிரசாரகர்கள் நமக்கு வேணும். இது போல இளைஞர்களைச் சேர்த்துப் பயிற்சி கொடுத்து, கட்சிப் பிரசாரத்துக்கே கிராமம் கிராமமா அனுப்பனும். அந்த மாதிரி ஒரு ஏற்பாட்டுக்கு இப்படிப் பெண்கள் நமக்குத் தேவை...”

லோகா விடுவிடென்று பேசுகிறாள். “ஏன்? கிராம சேவிகா அது இதெல்லாம் என்ன பின்ன? என்னைக் கேட்டா இது மாதிரி பிரசாரத்துக்கு இளைஞர்களை நம்பிப் பிரயோசனமில்லை. ஒரு கிராம சேவிகையின் பிரச்னையை நான் நேரில் பார்த்தேன். ஒரு விவரம் தெரியாத பெண் வந்து நமக்கு யோசனை சொல்றதான்னு கிராம மக்கள் நினைக்கிறாங்க. அவளைக் கேலியும் கிண்டலும் செய்து அவளுக்குப் போதும் போதும்னு பண்ணிடறாங்க. ஒரு பொண்ணு எங்கிட்டச் சொல்லி அழுதா. சிவனேன்னு டீச்சர் டிரெயினிங்னாலும் போயிருப்பேன், இப்படி வந்து மாட்டின்டேன்னா ...”

“நோ நோ-நான் சொல்றது அந்த மாதிரியே இல்லே லோகா. அது அரசுச் சார்புடையது, இது முழுக்க முழுக்க பார்ட்டி. இவர்கள் பொதுமேடையில் கிராம மக்களைக் கவரும் விதமாகப் பேசுவார்கள்; நாடகங்கள் நடித்துக் காட்டுவார்கள்; பாட்டுக்கள் பாடுவார்கள்; கதைகள் சொல்லுவார்கள். இதற்கு முதலில் ஒரு நல்ல ஆளுமை, பர்சனாலிடி, கம்பீரம் வேணும், தோற்றத்தைப் பார்த்தே. வந்து மேடையில் நின்றாலே கவர்ச்சிகரமாக இருக்கணும், பிறகு பேச்சில அந்தக் கவர்ச்சியைக் கொண்டுவரப் பயிற்சி கொடுக்கணும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/130&oldid=1102031" இலிருந்து மீள்விக்கப்பட்டது