பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

ரோஜா இதழ்கள்

அந்தக் குரலைக் கேட்டு மைத்ரேயி அதிர்ந்தாற்போல் பார்க்கிறாள். அநுசுயா அவரைப் பார்த்துத் தலைகுனிந்து நிற்கிறாள்.

சேது சிரித்துக்கொண்டே கையலம்பிக் கொண்டு போகிறான். ராஜா இப்போதுதான் தயிருக்கு வந்திருக்கிறார்.

மைத்ரேயி மௌனமாக ஊறுகாய் போடுகிறாள். ராஜா உண்டு முடிந்து அறைக்குச் செல்கிறார்.

மேசையைச் சுத்தம் செய்யும் அநுசுயா மாம்பழத் தட்டைக் கொண்டுவந்து சமையலறையில் வைக்கிறாள்.

முதல் நாள் மதுரமும் அவளும் சாப்பிட உட்கார்ந்தாற் போல் இன்று அநுசுயாவும் அவளும் சமையலறைத் தரையிலேயே இருவரும் ஆளுக்கொரு இலையில் அமருகின்றனர்.

மாம்பழத் துண்டங்களை அநு இலையில் வைக்கிறாள்.

“அது இருக்கட்டுமே? பாலா வந்தால் சாப்பிட மாட்டா ?”

“ஏன்? பாலாதான் சாப்பிடணுமா? நாமும் சாப்பிடலாம். பாலா வந்தால் முழுப்பழம் இருக்கு... நானும் இப்ப ஃபிரிட்ஜைத் திறந்து இன்னொறு பழம் எடுத்திட்டு வந்து முழுசாச் சாப்பிடப் போறேன்...”

“எனக்கு எப்படியோ இருக்கு அநு. இவர்தான் எம்.பி.யா?”

“ஆமாம். இவருதான் ஹோம் கமிட்டில பிரஸிடன்ட். அம்மா வைஸ் பிரஸிடன்ட்.”

“எனக்கு ஹோமில் சேர்ந்துடணும்னு இருக்கு. இந்த வீட்டு விவகாரம் எனக்கு எப்படியோ இருக்கு. பர்ண சாலையிலே அவரு. அவர் ஏன் இங்கே வந்து சகஜமா இருக்கிறதில்ல?”

அநுசுயா முழு மாம்பழச்சாறு ஒழுக நடுவில் நின்று சிரிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/132&oldid=1102835" இலிருந்து மீள்விக்கப்பட்டது