பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

ரோஜா இதழ்கள்

மைத்ரேயிக்கு முகம் சிவக்கிறது. “அப்படியெல்லாம் நான் எந்த மாதிரியான நிலைக்கும் வருமுன், ஒரு அம்மா எச்சரிக்கை பண்ணி கையில் பணமும் கொடுத்து அனுப்பினாங்க. அக்கா வீட்ல வெளிலே துரத்தினதும் மதுரத்தம்மா தான் சோறுபோட்டு இங்கே கூட்டி வந்தது.”

மனநெகிழ்ச்சி, அநுசுயாவை ஒத்தவளாகக் கொண்டு விடுகிறது. அவளிடம் உள்ளத்தைக் கூறியதும் ஓர் ஆறுதல் தோன்றுகிறது.

“ஆனா, அம்மா உன்னை இங்கே வச்சிக்கிறது சந்தேகம். ராஜா என்ன பேசினார் தெரியுமில்லே?...”

“தெரியாதே! நான் கவனிக்கலியே ?”

“உன்னை ஹோமிலே சேர்க்க அவர் இஷ்டப் படலேன்னு நினைச்சேன்”.

“அம்மா இப்ப அவங்க ரூமில்தானே இருப்பாங்க? நான் போயி கேட்கட்டுமா? எனக்குச் சமயம் எதுன்னே புரியல”

“நீயாப்போயி அவங்களிடம் கேட்காதே. அவங்களுக்குத்தான் தெரியுமே? சொல்லுவாங்க. ஏன், ராஜாபார்ட்டி வேலைக்கு உன்னை எடுத்திட்டா உனக்கு நல்லதுதானே ? நீ பெரிய ஆளாப்போறா!”

“அப்படி யார் சொன்னது?”

“அட மக்கு அவங்க பேசிட்டாங்களே, கேக்கல? அம்மாளுக்கு அது புடிக்காமதான் உர்ருனு எழுந்து ரூமுக்குப் போயிட்டாங்க, மாடிக்கு!”

மைத்ரேயியின் முகம் விரிகிறது. “அப்படியா ? நான்தானே பரிமாறினேன்? நீ உள்ளே இருந்தாயே ? எப்படிக் கேட்டே?”

“காதால் கேட்டேன். அவங்க பேச்சை நீ கேட்காம என்ன பரிமாறினே ?”

“சிலது காதில் விழுந்தது. என்னமோ பார்ட்டி வொர்க் டிரெயினிங்குன்னு சொன்னார். பிரசாரம்னு சொன்னது தெரிஞ்சுது. எனக்கா அது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/136&oldid=1102842" இலிருந்து மீள்விக்கப்பட்டது