பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

ரோஜா இதழ்கள்

உடனே இறந்து போயிட்டாரு. அங்கேந்து இங்கே மூணு வருஷத்துக்கு முன்னதான் வந்தேன்..” என்று தன் கதையைக் கூறி முடிக்கிறாள் அநுசுயா.

பெற்ற குழந்தையைக் கூடப் புறக்கணித்துவிட்டுப் போகும் அளவுக்கு ஒரு உடல் வேட்கையா?

கல்வியறிவும் மறுமலர்ச்சியும் இல்லாதவளின் வேட்கை அத்தகையதோ என்னமோ? சாதி, குடும்பமேன்மை, தார்மிக நெறிகள் எல்லாவற்றையுமே அந்த வேட்கை பலவீனமாக்கி விடும்போது எந்த மேன்மையும் இல்லாதவர்களிடத்தில் அது ஆட்சி செலுத்துவதில் என்ன வியப்பு?

“பிறகு நீ உங்க அம்மாளைப் பார்க்கவே இல்லையா அநுசுயா ?”

“ஊஹும். காந்தி இல்லத்து சாரதாம்மாதான் எனக்கு அநுசுயான்னு பேர் வச்சாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. இப்ப கல்யாணம் கட்டிட்டு வடக்க எங்கியோ இருக்காங்க...”

“ஏன் அது, உசந்த சாதி, தாழ்ந்த சாதின்னு இருக்கறதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று மைத்ரேயி தீவிரமாக ஒரு கேள்வியைக் கேட்கிறாள்.

“என்ன நினைக்கிறது? உசந்த சாதி உசந்த சாதிதான். அதனாலதான் நீ பூரிசுட இடத் தெரியாமலிருந்தும் சமையல் ரூமுக்குள்ள இருக்கே. நான் எல்லாம் தெரிஞ்சும் வெளிலே தான் நிக்க வேண்டி இருக்கு. இந்த அம்மா வீட்டிலதான் நான் உள்ளே வர்றேன். ஏன், நான் உள்ளே வந்து தொடுறது வெளியே இருக்கும் ஐயாவுக்குத் தெரியாது. கோகிலம்கூட ஒரு மாதிரிப் பேசுவா. எனக்கு ஒரு சந்தேகம், ராஜாவுக்குக் கூடக் பிடிக்காதுன்னு.”

கறுப்பாக, குட்டையாக, சற்றே மாறு கண்ணுடன், நெற்றியில் பச்சைக்குத்துப் பொட்டுடன் விளங்கும் அதுசுயா தான் தீண்டாத வகுப்பிற்பட்டவள் என்பதைக் கூறாமல் விளக்குகிறாள்.

லோகாவின் மீது மைத்ரேயிக்குப் பெருமதிப்பு உண்டாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/138&oldid=1102847" இலிருந்து மீள்விக்கப்பட்டது