பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ரோஜா இதழ்கள்

கொள்பவள்போல் ஏன் தோன்றுகிறது? சமுதாயத்தில் வழி வழியாக உயர் மதிப்பையே பெற்றிருக்கும் உரிமையைக் கொண்டு, அந்த உரிமைக்கான பொறுப்பை நழுவவிட்டதை மறந்த மாறுபட்ட வாழ்வில் எதிர்ப்புக்களையும் சுடு சொற்களையும் ஏற்க வேண்டியிருப்பதைப் பொறுக்க இயலாமல் அவள் துடிப்பானேன்? உண்மையில் சாதி என்பது எப்படி வந்தது? மேல் நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்களாகவே இருப்பதால் சாதிகள் கிடையாதாம். அப்படி சாதிப் பிரிவு என்ற ஒன்றில்லாமலிருந்தால் அக்காவும் மற்றவரும் அவள் தனராஜிடம் தன்னை இழக்கத் துணியும் வரை நிகழ்ந்திருக்குமோ? அப்படியே இருந்தாலும், அவர்கள் அவளை முதலிலேயே வீட்டைவிட்டுத் துரத்தும் அளவுக்கு வெகுண்டிருக்கமாட்டார்கள். அதற்குக் காரணம் அவன் வேறு சாதிக்காரன். அவள் தாழ்ந்த சாதியாக இருந்து அவன் உயர்ந்த சாதிக்காரனாக இருந்தால் நிராகரிப்பு அவனுடைய பக்கத்திலிருந்து வந்திருக்கும். ஜாதகப் பொருத்தம் குலம் கோத்திரம் எல்லாம் பார்த்துத்தான் இந்த லோகாவுக்கும் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். உண்மையில் மதுரத்தின் குடும்ப வாழ்வைவிட லோகாவின் வாழ்வு எந்த அளவில் மேம்பட்டது?

‘அந்தணன்’ என்று அவளால் அநுமானிக்க இயலாத ஒரு செல்வாக்குக்காரன் சொந்தமாக உள்ளே வந்து உணவு கொண்டு வீட்டின் முன்னறையில் தங்குகிறான். கட்டிய கணவன் உள்ளே வராமல் ஒரு போலி வாழ்வு நடத்துகிறான். இவளே தள்ளிவைத்தாலும் அவனுக்கு எதிர்க்கத் துணிவில்லை. ஏன்? இவ்விதம் பணியாட்களுக்கெல்லாம் தெரியத் தன்மானமின்றி வாழ்வதைக் காட்டிலும் வேறெந்த ஊரிலேனும் இருக்கலாமே?...

சாப்பாடு முடித்துப் பாத்திரங்களைக் கோகிலத்துக்குக் கொண்டு போடுகிறாள் மைத்ரேயி, பேச்சு சுவாரசியத்தில், லோகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்ததைக்கூட கவனித்திருக்கவில்லை அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/140&oldid=1102851" இலிருந்து மீள்விக்கப்பட்டது