பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

ரோஜா இதழ்கள்

சேது படம் பார்க்கப் போயிருக்கிறான். ‘குடிசை’க்காரருக்கு அவள் தோசை வார்த்துக் கொண்டிருக்கையில் லோகா பரபரப்பாக வருகிறாள்.

மணி ஏழேமுக்கால்.

“என்ன பண்ணிண்டிருக்கே?...” என்று கேட்கிறாள்.

“பாலா அப்பா தோசை..” என்று மைத்ரேயி தடுமாறுகிறாள்.

“பாலாவையே கொண்டுபோகச் சொல்றேன். இல்லாட்ட இங்கே வந்து சாப்பிடுவார். நீ சாப்பிட்டுட்டு ரெடியாயிரு. உன்னைக் கூட்டிப் போகிறேன். காலையிலே இங்கே ஆள் வருவார்.”

மைத்ரேயிக்கு உணவு இறங்கவில்லை.

லோகா ஃபோனில் பேசும் குரல் கேட்கிறது. எங்கோ காரில் மறுபடியும் வெளியில் செல்கிறாள்.

பாலா தோசையைக் கொண்டு வைத்துவிட்டு வருகிறாள். சேது வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்குச் செல்கிறான்.

இரவு பத்துமணி வரையிலும் தன் பையை வைத்துக் கொண்டு அந்தப் பெரிய வீட்டில், கீழ்த்தளத்தில் தனியாகக் காத்திருக்கிறாள்.

பத்துமணியடித்த பின்னரே காரின் குரலொலி கேட்கிறது.

“பாலா!..”

“இதோ வரேன்மா.”

பாலா இறங்கி வந்ததும், “வீட்டைப் பார்த்துக்கொள், இவளைக் கொண்டு விட்டுட்டு வரேன்...”

மைத்ரேயி பாலாவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே தன் பையுடன் வண்டியின் பின்புறத்தில் அமர்ந்து கொள்கிறாள்.

வெள்ளைக் கட்டிடம்; வாயில்முட்கம்பி வேலி உயரமாக இருக்கிறது. பெரிய கதவு. முன் வாயிலில் நீலக்கரை போட்ட வெள்ளைச் சேலை உடுத்தி நாற்பத்தைந்து வயசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/142&oldid=1102857" இலிருந்து மீள்விக்கப்பட்டது