பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

141

மதிக்கக் கூடிய பெண்ணொருத்தி லோகாவுக்குக் கை குவிக்கிறாள். “வணக்கம்மா....”

“ராசம்மாவா ?”

“ஆமாம்மா. சாயங்காலமே அது சொல்லிச்சி...”

“இவதான் மைத்ரேயி, புதிசு ரொம்ப கொஞ்சம் கவனிச்சிக்க. நல்ல படிச்ச பொண்ணு.”

“வாம்மா...” என்று ராசம்மா சிரிக்கிறாள்.

எள்ளும் அரிசியுமாக நரைத்த கூந்தலைக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். அநுசுயாவைவிடக் குட்டை, பருமன். நல்லகறுப்பு. வெள்ளைச் சேலை பளிச்சென்றிருக்கிறது.

“இவளுக்கு ஹாலில் இடம் கொடுக்க வேண்டாம். படிப்பறையில் யாரிருக்கிறாங்க?”

“ரோஸ் லீனும் மீனாட்சியும் இருக்கு. இன்னைக்குப் பர்வதம்கூட அங்கேதான் படுத்திருக்கு...”

“இவள் அவங்ககூட இருக்கட்டும், நாளைக்கு மல்லிகா வந்ததும் நான் சொன்னேன்னு சொல்லு, நான் பின்ன வரேன்!”

“சரிம்மா..!”

“வரட்டுமா?...குட்நைட்!” என்று மைத்ரேயியிடம் திரும்பி விடைபெற்றுக்கொண்டு உள்ளே நுழையாமலே வண்டியிலேறிப் போகிறாள் லோகா.

அப்போது, அருகில் தெரிந்த புதிய வெள்ளைக் கட்டடம் ஒன்றிலிருந்து அநுசுயா இறங்கி வருவது தெரிகிறது.

“வந்திட்டியா?...” என்று மைத்ரேயியைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

மைத்ரேயிக்கு குழப்பமாக இருந்தாலும் புன்னகை செய்கிறாள்! “சத்தமே இல்லாமல் அமைதியாக இருக்கிறது இங்கே...”

“அட, நீ கண்ணு வச்சிடாதே! பாலபவனம் இது. சில பிடாரிங்க அழ ஆரம்பிச்சா, ராத்திரி முழுசும் ஓயாது...” என்று மறுமொழி கொடுக்கிறாள் அநுசுயா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/143&oldid=1102859" இலிருந்து மீள்விக்கப்பட்டது