பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

143


“அப்ப இந்தப் புதுப்பொண்ணு இங்கே படுக்கட்டும்..” என்று கூறிக் கொண்டு சென்ற ராசம்மா சற்றைக் கெல்லாம் ஒரு பாயும் போர்வையும் கொண்டு வருகிறாள்.

“இப்பத்தான் போர்வை வேணாமே, வேத்துப் புழுங்குதே, இத்தை மடிச்சித் தலையில் வச்சிட்டுப் படுத்துக்க. காலையிலே பார்த்துக்கலாம்...”

மைத்ரேயி ஒரு மூலையில் பையை வைக்கிறாள்.

பர்வதத்தின் அருகிலேயே பாயை விரிக்கிறாள். அவள் படுத்துக் கொள்வதைப் பார்த்துவிட்டு, ராசம்மா விளக்குடன் வெளியே செல்கிறாள்.

“இங்கே எலக்ட்ரிக் லைட் கிடையாதா?” என்று மைத்ரேயி கேட்கிறாள்.

“இருக்கு. பத்துமணிக்குமேலே மெயினை அணைச்சுடுவா...”

“யாரு?”

“யாரு, எல்லாம் இந்த ராசம்மாதான், உன்பேரென்ன?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“மைத்ரேயி...”

“பிராமினா ?”

“ஆமாம்...”

“பாவம்... நானும் பிராமின்தான், இந்தமாதிரி வந்து தொலைஞ்சிட்டது. மூதேவிகள். தலையெழுத்து. அநுபவிக்கிறோம். கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுக்கிறார். குத்தம் பண்ணினவங்களும் நம்ம சாதிதான். ஆனா அவாள்ளாம் பெரியவாளாவே இருக்கா பாவிகள். இனிமே வயித்திலிருக்கிறது வெளியில் வந்தப்புறம் என்னென்ன ஆகுமோ... உனக்கு எத்தனை மாசம் இது?”

அந்தக் கேள்வியில் ஒருகணம் அவள் கடுகிலும் கடுகாகிப் போகிறாள். அடுத்தகணம் அவளுடைய தன்மானம் கட்டுக்கடங்காத ரோசமாகப் பொங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/145&oldid=1102876" இலிருந்து மீள்விக்கப்பட்டது