பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ரோஜா இதழ்கள்

முப்பாட்டன் வைப்பாட்டன் கட்டிவச்சான்...” என்று நாக்கூசும் சொற்களை அவிழ்த்து விடுகிறாள் அவள்.

“இரு, இரு, ஸிஸ்டர் வரட்டும், சொல்லிஇந்தக் கழுதைக்கு மூணு பகல் சோறில்லாம அடிக்கிறேன்...” என்று அவள் கறுவுகிறாள்.

மைத்ரேயி இந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக வாயடைத்துப் போய் நிற்கிறாள். முதல் நாளிரவு அவள் வரும்போது உறங்கிக் கொண்டிருந்தவளில் ஒருத்தி பல்லைத் துலக்கிக் கொண்டே அவளிடம் வருகிறாள். அவளை ஏற இறங்கப் பார்க்கிறாள், அதிசயத்துடன். பிறகு “ஒ...!” என்று குரலை ஏற்றியும் இறக்கியும் வளைத்தும் நெளித்தும் கண்களைச் சிமிட்டுகிறாள். அருகில் வந்து இடது கையை அவளுடைய வயிற்றில் வைத்து ஏதோ கேலி பேச முற்படுகிறாள்.

“...தொடாதே, என்னை! சீ!” என்று வெருட்டுகிறாள் மைத்ரேயி,

“ஐயே, செழுப்பா இருந்தா இத்தினிகெருவமா அதுக்கு? வயித்திலே இருக்கிறது கறுப்பா இருக்கப்போவுது!” என்று சிரிக்கிறாள் அவள்.

அந்தச் சொற்கள் முன்பே குருதிவடியும் புண்ணைக் குத்திக் கிழிக்கின்றன. ஒரு பெண்ணின் தாய்மை, இவ்வளவு கேலிக்குரியதாக, இவ்வளவு எளிதாக இங்கே குதறி எறியப்படுமா?

மைத்ரேயி இப்போது அழவில்லை. அழுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றிச் சிந்திக்கிறாள்.

அவர்கள் எல்லோருமே ஏமாற்றப்பட்டவர்களாகவோ, குதறி எறியப்பட்டவர்களாகவோ இருக்கலாம். உடைந்து போன கண்ணாடியில் முழு பிம்பம் எப்படி விழும், இவர்களுக்கு வாழ்க்கையின் அழகு, அவர்களுக்குத் தெரிந்த அளவில் கூடத் தெரிந்திராமலிருக்கும். வாழ்க்கையின் குரூரங்களிலேயே கண்விழித்து, அதிலேயே பழகி, ஊறிப் போனவர்கள். மீன் வாடையில், சேற்றுக் குட்டைக் கொசுக்கடியில் வளரும் குழந்தை பூங்காவனத்தை ரசிக்கமாட்டானாம். அங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/148&oldid=1123733" இலிருந்து மீள்விக்கப்பட்டது