பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

153


உடனே மோதல் உண்டாகிறது.

சமையற்கட்டில் பர்வதம் அமர்ந்து ஒரு கூடை காய்ந்த கொத்தவரைக்காயை ஆய்ந்து நறுக்குகிறாள். அடுப்படியில் அமெரிக்க தருமமான மாவைக் கரைத்து, இரண்டு வட்டைகளில் கூழ்காய்ச்சிக் கொண்டிருக்கின்றனர் தெய்வநாயகியும் பங்கஜமும். பச்சை மிளகாயும் உப்பும் புளியும் வைத்து அந்த கூழுக்கு கொறடாவாக வள்ளி உரலில் சட்னி அரைக்கிறாள். எல்லோரும் அழுக்குப்படிந்த நீலக்கரை வெள்ளைச் சேலையைத்தான் உடுத்தியிருக்கின்றனர்.

அவளும் சற்றுப் போனால் அந்தச் சேலையைத்தான் உடுத்த வேண்டியிருக்கும்.

சிமிட்டித் தரையில் குழந்தைகள் பாலைச் சிந்தியுள்ள இடங்களிலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றன. அங்கும் தண்ணீரைக் கொண்டு கொட்டுகிறாள் ஒருத்தி. இன்னொருத்தி துடைப்பத்தால் தேய்க்கிறாள்.

இந்த அழுக்குகளைக் கழுவ முடிகிறது. இப்படியே வாழ்க்கையில் படிந்துவிடும் அழுக்குகளைக் கழுவ இயலுமோ?

“நீ ஏன் இங்கே நிக்கிறே? ஆபீஸ் ரூம்ல உன்னைக் கூப்பிடுறாங்க!” என்று முத்தம்மா அவளுக்கு நினைவூட்டுகிறாள்.

முதல் நாளிரவு அவள் பார்த்த அறை திறந்திருக்கிறது. ராசம்மா உள்ளே நாற்காலி மேசையைத் துடைக்கிறாள். ஏதோ காகிதங்களை மேசைமீது ஒழுங்காக வைக்கிறாள். அந்த மேசை மீதிருக்கும் தொலைபேசி அப்போது ஒலிக்கிறது. ராசம்மா எடுத்துக் கேட்கும்போதே கொடிபோன்ற உடலுக்குடைய இளநங்கை ஒருத்தி அந்த அறைக்குள் நுழைகிறாள். பெரிய பெரிய மாங்காய் அச்சிட்ட காச்மீரப் பட்டுச்சேலை அணிந்திருக்கிறாள். சிற்பத்தில் கடைந்தெடுத்தாற் போன்ற கைகள். இளநீலவண்ணத்தில் சேலைக் கேற்ற குட்டைக் கைச் சோளி. ஒரு கையில் மெல்லிய கண்ணாடி வளையல்கள், பொருந்தும் வண்ணத்தில் அழகு செய்கின்றன; இன்னொரு கையில் தங்கக் காப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/155&oldid=1102949" இலிருந்து மீள்விக்கப்பட்டது