பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

ரோஜா இதழ்கள்

பொருந்திய சிறுகடிகாரம் அணிந்திருக்கிறாள். விரலில் பெரிய நீலக்கல் பதித்த மோதிரம். மார்புப் பள்ளத்தில் வட்டவடிவமான தங்க முகப்பு விழும்படியான மெல்லிய சங்கிலி அவளுடைய தந்தக் கழுத்தை அலங்கரிக்கிறது. இயற்கையாகவே சிவந்த மேனி, இதழ்களில் மெல்லிய பூச்சுப் பூசியிருக்கிறாள். முன்புறம் அலை அலையாகத் தெரியும் கூந்தல், பின்புறம் கருநாகம் சுருண்டு கிடப்பது போன்று ஒரு மெல்லிய வலைக்குள் சுருண்டிருக்கிறது. அவளுடைய அழகைவிட அலங்காரமே அவளை வைத்த கண் இமையாமல் பார்க்கத் தூண்டுகிறது. ஆனால் அவளுடைய முகத்தில் இயல்பான மலர்ச்சி தோன்றவில்லை. தொலைபேசியை ராசம்மாளிடம் வாங்கிக்கொண்டு செய்தியைக் கேட்கிறாள்.

ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள். மைத்ரேயிக்காக லோகாதான் பேசுகிறாள் என்று புரிகிறது.

பிறகு அவள் நாற்காலியில் அமர்ந்து கொத்துச் சாவியை எடுத்து இழுப்பறையைத் திறக்கிறாள். ஏதோ காகிதங்களைப் பார்த்து மூடுகிறாள். பிறகு அலமாரியைத் திறந்து ஒரு தடிப்புத்தகத்தை எடுத்துப் புரட்டுகிறாள். முகத்தில் சிரிப்பே இல்லாத கண்டிப்பு நிலவுகிறது. ராசம்மா மைத்ரேயியைக் காட்டி “நேத்து லோகாம்மா ராத்திரி கொண்டாந்து விட்டாங்க...” என்று அறிவிக்கும்போதே, “தெரியும் சொன்னாங்க, நான் விசாரிக்கிறேன்” என்று அவள் நிமிர்ந்து பார்க்காமலே அலட்சியமாக நோட்டைப் பார்த்துக் கொண்டு கூறுகிறாள்.

“அப்ப... நான் வரட்டுமா, ஸிஸ்டர்?”

“இரு... போகலாம்...” என்று அவளை நிறுத்திவிட்டு அரசினர் மருத்துவமனை டாக்டர் கேட்பது போன்ற தோரணையில் அவள், ‘பேரென்ன?” என்று கேட்கிறாள்.

தன்னைத்தான் அவள் வினவுகிறாள் என்று புரிந்து கொண்டு பதிலளிக்கச் சில விநாடிகளாகின்றன மைத்ரேயிக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/156&oldid=1102954" இலிருந்து மீள்விக்கப்பட்டது