பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

ரோஜா இதழ்கள்


“நெல்ல நாயண்டி இது. நாந்தான் அப்பவே இவ இப்படிப் பேசுவான்னு தனியே கொஞ்சம் பொங்கலும் சுண்டலும் எடுத்து வச்சிருக்கேனே? ஏண்டி பின்னியும் அத்தெப்புடிச்சி கலாட்டா பண்ணுறிங்க? அதது மதம் சாதி. இன்னாமோ வச்சிருக்கு. அதென்ன மீனு கேக்குதா, கோழிக்கறி கேக்குதா? உங்க சாமிக்குப் படச்சது வாணாங்குது. இன்னாத்துக்கு? அது முன்னொருக்க பூசை பண்ணினப்பவே சொல்லிச்சி. அத்தெ மனசில வச்சுக்கிட்டே எடுத்து வச்சேன், சாமிக்குப் படைக்காம.” உண்மையில் முத்தம்மாள் வைத்திருந்ததாக மறைவிடத்திலிருந்து கூறிக் கொண்டு வந்ததை மைத்ரேயி நம்பவில்லை. ரோஸி மண்டபத்திலிருந்து நழுவியதைப் பார்த்த பிறகே எடுத்து வைத்திருக்க வேண்டும். முத்தம்மா ஆத்திரத்துடன் அதில் எச்சிலைத் துப்பியிருந்தாலும் வியப்பில்லை.

“ஆ..இந்தா, எலையில்லாட்டி தட்டைக் கொண்டு வச்சிக்க. எலையும் சாமி முன்னால வச்சிருந்தாங்க. உனக்கென்னாத்துக்கு...” என்று முத்தம்மா அவளைத் தட்டுக் கொண்டுவரச் சொல்கிறாள்.

“இலையைச் சாப்பிடப் போறாளா? தூக்கி எறியத் தானே போறோம்? இலைபோட்டுக்கிட்டா என்ன ?” என்று கேட்கிறாள் பர்வதம்.

“ஆமாம். இலையே போடு,” என்று ராசம்மா கூறினாலும் முத்தம்மா விடுவதாக இல்லை.

“அது வேணான்னா நாம ஏன் வற்புறுத்தணும்? ஏம்மா? எலை போட்டுக்கறியா?”

அப்பாடி, ‘உம்’ என்று தலையை ஆட்டுகிறாள் ரோஸலின்.

நெஞ்சில், தோள்களில் நெற்றியில் கைவைத்து சிலுவைக் குறி செய்து கொள்கிறாள். பிறகு அவள் இலையில் வைத்ததை உண்ணத் தொடங்குகிறாள்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சங்கேதங்கள் செய்துகொண்டு சிரிப்பதுமாகத் தொடங்கி குரல்கள் கட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/162&oldid=1123734" இலிருந்து மீள்விக்கப்பட்டது