பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

161

கட்டவிழ்ந்து விழந்து கொண்டு மோதிக் கொள்கின்றன, சொல்லாயுதங்களால்.

மைத்ரேயிக்கு எல்லாம் பழகிப் போகின்றன. ராஜாவின் நன்கொடையால் எழும்பிய பள்ளியில் மீனாட்சியும் ரோஸலீனும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அங்கே அவளும் பள்ளி இறுதி வகுப்பில் இடம் பெறுகிறாள். லோகாவே அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்று பள்ளியில் சேர்த்துவிட்டுப் பரிவுடன் புத்திமதிகள் கூறியபோது அவள் நெஞ்சு நெகிழ நன்றி கூறத் தெரியாமல் நின்றாள்.

படகு கவிழ அலைகடலில் தூக்கி எறியப்பட்டவளுக்கு ஒரு மரத்துண்டு கிடைத்தாற்போல் அவளுக்கு அந்த வசதி கிடைத்திருக்கிறது. அவள் அலைகடலில் நீந்திக் கரையேற வேண்டும்.

பள்ளிக்கும் இல்லத்துக்கும் இடையே நிறையத் தொலைவு இருக்கிறது. அந்தப் பள்ளியின் வண்டி, இல்லத்தின் பக்கம் வரும்போது அவர்கள் மூவரும் ஏறிக் கொள்கின்றனர். பகலுணவு அங்கு கொடுக்கும் அறக்கட்டளை மதியச்சோறுதான். அது பல நாட்களில் வாயில் வைக்க முடியாததாக இருக்கும். படிப்பு ஏறாதவர்களுக்கு, படிக்க விரும்பாதவர்களுக்கு, அங்கே தையல், பூவேலை செய்தல் ஆகிய கலைகளைக் கற்றுக் கொள்ள வசதி செய்திருக்கின்றனர். இரவு படுத்துக் கொள்ளும் கூடமே பகலில் தொழிற்கூடமாயிற்று. எனவே மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து திரும்பும்போது, அந்தக் கூடம் அலங்கோலமாக இருக்கும். கூளமாய்க் கிடக்கும். வெட்டுத்துண்டுகள்; நூல் சிக்கல்களுக்குப் பொருத்தமாக தங்கள் அடக்கமற்ற உணர்வுகளை ஒலிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டும் ஏசிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். சில நாட்களில் நோயாளிக் குழந்தைகளின் அழுகுரலும் சேர்ந்து ஒலிக்கும். சில நாட்களில் மல்லிகா அலுவலக அறையில் உட்கார்ந்திருக்கிறாள் என்பது புலனாகும். அன்று செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியோ, மல்லிகாவின் ஆடை அலங்காரங்களைப் பற்றியோ ஒருவரும் பேசமாட்டார்கள்.

ரோஇ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/163&oldid=1103808" இலிருந்து மீள்விக்கப்பட்டது