பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

ரோஜா இதழ்கள்

ராசம்மாவிடம் அவர்களுக்கு அச்சமே கிடையாது. அந்தப் பெண்களுக்கெல்லாம் முத்தம்மாவுக்கு உதவியாகச் சமையலறைவேலை வாரத்தில் இரண்டு நாட்களாக மாறி மாறி முறையாக வரும். படிக்கும் பெண்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஒருநாள் முறைவரும். அன்று மைத்ரேயியும் மீனாட்சியும் பரிமாறி, பெருக்கி, துடைத்து, பாத்திரங்கள் துலக்கி மற்றவர்களைப் போல் உதவி செய்கிறார்கள். ரோஸ்லீன் சமையலறை வேலைக்கு வராமல் குழந்தைகள் பகுதிக்கு நழுவிவிடுகிறாள். அவளை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ரோஸ்லீனும் மீனாட்சியும் அவளுடன் பள்ளிக்கு வந்தாலும், அவளுடன் பேசிப் பழகுவதில்லை. மைத்ரேயியும் அவர்களுடைய அருகாமையை நாடுவதில்லை. பள்ளி வகுப்பிலும்கூட அவள் தனியாகவே இருக்கிறாள். படிப்பு, படிப்பு, அது ஒன்றே குறி.

அந்தப் பள்ளியும் கைம்பெண்களின் மறுவாழ்வுக்கான இயக்கத்தினரின் முயற்சியில் நடைபெறும் பள்ளியாதலால் அவளைக் காட்டிலும் வயது அதிகமான பெண்கள் அங்கே கல்வி பயில்கின்றனர். என்றாலும் மீட்பு விடுதியிலிருந்து அவள் வருவதால் பலரும் அவளை இயல்பாக நெருங்குவதில்லை. மேலும் அமைதி, ஒழுங்கு, பாடங்களைக் கற்பதிலும் எழுதுவதிலும் அவள் காட்டும் ஆர்வம் எல்லாம் ஆசிரியர்களைக் கவர்ந்ததனால், அவர்கள் அவளிடம் அதிகமான பற்றுவைப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றியது. அதனாலும் மற்ற மாணவிகளுக்கு அவளை நெருங்கித் தோழமை கொள்ளப் பிடிக்கவில்லை. அநுசுயாவை அவள் பல நாட்களில் பார்த்துச் சிரிப்பதோடு சரி, பேசுவதற்கு நிற்பதில்லை.

இந்த மீட்பு இல்ல வாழ்க்கையில் அவள் மிகவும் ஆவலுடன் வரவேற்கும் நாள் சனிக்கிழமைதான்.

சனிக்கிழமைகளில் பிற்பகல் நான்குமணிக்கு அவர்களுக்கு நல்லுணர்வைப் போதிக்கும் வகையில் பேசுவதற்கு ஒரு பெண்மணி வருகிறாள். அந்த வகுப்புக்குப் புத்தகம் நோட்டு ஒன்றும் கிடையாது. அதில் பரீட்சையும் இல்லை. அலங்கோலமாகி விட்ட புறவாழ்க்கையில் உழன்றபின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/164&oldid=1103809" இலிருந்து மீள்விக்கப்பட்டது